Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பாவின் பதவி நீடிக்குமா... பறிபோகுமா?

.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா புஷ்பா, கடந்த 2014 ஏப்ரல் மாதம், அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. தற்போது அ.தி.மு.க. தலைமை, சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, இனி ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா என்ற விவாதங்கள் கிளம்பி உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி சார்பில் வெற்றி பெற்று, லோக்சபா எம்.பி.யானவர் பப்பு யாதவ். அதன்பின், குடும்ப அரசியல் செய்வதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டுக்களை கூறியதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், லோக்சபாவில் எந்த கட்சியையும் சாராத உறுப்பினராகவே பப்பு யாதவ் தொடர்கிறார். அவரது எம்.பி., பதவிக்கு எந்த பிரச்னையும் இதுவரை வரவில்லை.

பொதுவாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முக்கியமான விவாதங்களில், ஓட்டெடுப்பு நடக்கும்போது அதனை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ  கட்சி தலைமை எடுக்கும் நிலைப்பாடு பற்றி அந்தந்த கட்சியின் கொறடா, எம்.பி.களுக்கு உத்தரவு போடுவார். கொறடா உத்தரவை மீறி ஓட்டளித்தால் சம்மந்தப்பட்ட எம்.பி.யின் பதவிக்கு ஆபத்து வரக்கூடும்.

தற்போது, அ.தி.மு.க. தலைமையே சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதால், கொறடாவின் உத்தரவு அவருக்கு பொருந்தாது என்று ஒரு தரப்பினரும், தனது கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்து சசிகலா புஷ்பா வாக்களித்தாலும் அவரது பதவிக்கு ஆபத்து வராது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம், தி.மு.க. அல்லது காங்கிரஸ் போன்ற பிற கட்சி ஏதேனும் ஒன்றில் சசிகலா புஷ்பா சேர்ந்தால், கட்சி தாவல் தடைச்சட்டம் மூலம் அவரது எம்.பி. பதவி பறிபோகும். அதை அறிந்துள்ள சசிகலா புஷ்பா, வேறு கட்சியில் சேர மாட்டார் என்றும் கருத்து நிலவுகிறது. ஆனால் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களோ, ''ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பா, தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் தொடர்ந்து அவர் 2020-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்.

மேலும், வழக்கம்போல் சம்பளம் மற்றும் பயணப்படி என்று மாதம் ஒரு லட்சம் ரூபாயும், ஆண்டுக்கு 30 தடவை இலவச விமான பயணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அவருக்கு கிடைக்கும். எம்.பி.களின் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுக்கு வழங்கப்படும் 5 கோடி ரூபாயும் அவருக்கு வரும் என்கிறார்கள்.

தற்போது சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று ராஜ்யசபா தலைவரிடம் அவர் கடிதம் எழுதி கொடுத்தால், நாடாளுமன்ற விவகாரத்துறை மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளருக்கு, பாதுகாப்பு வழங்கும்படி கடிதம் அனுப்பப்படுமாம். மேலும், நாடாளுமன்ற விவகாரம் என்பதால் மாநில அரசு, சசிகலா புஷ்பாவிற்கு வேண்டிய பாதுகாப்பை வழங்கித்தான் ஆக வேண்டுமாம்!

ஆனால் தமிழக அரசு பாதுகாப்பு அளித்தால், பாதுகாப்புக்கு வரும் காவலர்கள் தன்னை உளவு பார்க்கக்கூடும் என்றும், எனவே தாம் தமிழக அரசின் பாதுகாப்பு தமக்கு தேவையில்லை என்றும் சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்படுவதால், பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும் அவர் அதனை நிராகரித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது. 

- எம்.கார்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ