Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூலிகை பயிர் பட்டியலில் சேர்க்கப்படுமா வெட்டிவேர்?!

கடலூர்: மூலிகைப் பயிர் பட்டியலில் வெட்டிவேரையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட வெட்டிவேர் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வெட்டிவேர் விவசாயி செந்தில் முருகன் கூறும்போது, ''இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதுவும் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகப்படியாக இந்த வெட்டிவேர்  பயிரிடப்படுகிறது. நொச்சிக்காடு, நடுதிட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது.

அதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியிருக்கிறார்கள். அவர்களால் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். ஆனால், தமிழக அரசுதான் இத்தொழிலை ஊக்குவிக்க முன்வருவதில்லை.

இந்திய அரசு வெட்டிவேரை மூலிகை பயிர் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு, அதனை வாசனை பயிர் பட்டியலில்தான் வைத்துள்ளது. அதனால், வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் இப்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.

தமிழக அரசானது, இப்பயிரை மூலிகை பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு வங்கிகளில் நேரிடையாக கடனுதவி அளிக்க வேண்டும். அத்தோடு, இவ்விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அல்லது மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் மானிய விலையில் டீசல் வழங்கப்பட வேண்டும்.

தற்போது இந்திய அரசானது வருடத்திற்கு 20 டன்னுக்கு மேல் வெளிநாடுகளிலிருந்து வெட்டி வேர்  எண்ணெய் இறக்குமதி செய்கிறது. தமிழக அரசு இந்த விவசாயத்தை ஊக்குவித்தால், அதில் பாதியளவு உற்பத்தி செய்து அரசுக்கு வருவாய் ஈட்ட முடியும்.

மேலும், வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், காலணிகள், கார் சீட்டுக்கு பயன்படுத்தும் மேட், தொப்பி போன்றவற்றை சந்தைப் படுத்தி அரசே அதை கொள்முதல் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் வெட்டிவேர் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால், சென்னையின் கூவம் போன்ற கழிவு நீர் ஓடும் நதிகளின் இரு கரையின் ஓரங்களில் இதை நட்டால் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, மண் அரிப்பைத் தடுக்கும்" என்றார்.

- க.பூபாலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ