Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாவம் தீர்க்கும் காவிரியா... பழைய துணிகளின் சங்கமமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புண்ணியம் பெற்றது காவரி ஆறு. இந்த புண்ணிய நதியில், சுமங்கலிகள் தங்கள் கணவருடன் நீராடி, மாங்கல்ய கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது ஐதீகம். கன்னிப் பெண்கள், நல்ல வாழ்க்கைத் துணை வேண்டியும், விவசாயிகள், விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்றும் காவிரியை வேண்டுவர். கூடவே திருச்சி மட்டுமல்லாமல், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள மக்களும் ஆற்றில் புனித நீராடுவார்கள்.

குறிப்பாக ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்களிலும், வழக்கமான நாட்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் ஸ்ரீரங்கம்,  அம்மா மண்டபம் காவிரிக்கரைக்கு வருகை தந்து, காவிரியில் நீராடி தூய ஆடையை அணிந்த பின்னர்,  தாங்கள் அணிந்திருந்த பழைய உடைகளை  ஆற்றில் விட்டு விட்டு செல்வார்கள்.

உடுத்திய துணியோடு நீராடும் பக்தர்கள், ஈரத்துணியை அப்படியே ஆற்றில் விட்டுவிட்டு செல்வதன் மூலம், தாங்கள் செய்த பாவங்கள் காவிரியோடு கலந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை. 

இப்படி ஆடைகளை ஆற்றில் விட்டுவிடுவதால், திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் மட்டும் தினந்தோறும் பல நூறு கிலோ பழைய துணிகள் குவிந்து கிடக்கின்றன. இதில் விசேஷ நாட்கள் என்றால்  இது இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படி கழற்றிவிடும் துணிகளை சேகரித்து எடைக்கு போடுவதை தொழிலாக செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் ஆடிப்பெருக்கு விழா மற்றும் குருப்பெயர்ச்சி முடிந்த கையோடு,  காவிரி ஆற்றில் மக்கள் கழட்டி எறிந்துவிட்டுப்போன ஆடைகளை சேகரித்து, உலர வைத்துக் கொண்டிருந்த  பால்ராஜிடம் பேசியபோது, ''எல்லோரும் ஆற்றில் பாவத்தை கழிக்க, தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி ஆற்றில் விட்டுவிட்டு செல்கின்றனர். அவற்றை, நான் உட்பட இன்னும் சிலரும், காவிரி ஆற்றோரம் காலை 6 மணியில் இருந்து ராத்திரி வரை காத்திருந்து சேகரிப்போம்.

அப்படி நாங்கள் சேகரித்த துணிகளில் கிழிந்த துணிகள், நல்ல துணிகள் என தரம் பிரிப்போம். கிழிந்த துணிகளை ஆற்றின் கரையில் ஒதுக்கி வைத்து, குப்பையுடன் மாநகராட்சியினரிடம் கொடுத்துவிடுவோம். நல்ல துணிகளை வெயிலில் நன்கு காய வைத்த பிறகு, 50 கிலோ எடை கொண்ட சின்ன சின்ன மூட்டைகளாகக் கட்டி வைப்போம். அதையெல்லாம், பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரிகளிடம் எடைக்கு விற்று விடுவோம்.

அவர்கள் கிலோ 2 ரூபாய், 5 ரூபாய்ன்னு விலை வைத்து கொடுப்பார்கள். பட்டுசேலைகள் என்றால் நல்ல விலைக்குப் போகும். அப்படி எங்களிடம் துணிகளை வாங்கும் வியாபாரிகள் நல்ல வேட்டி, சேலைகளை அப்படியே சலவைக்குப் போட்டு புதிய துணி மாதிரி தயார் செய்து, அதையெல்லாம் கைமாற்றி விட்டுவிடுவாங்க. இப்படி அவர்கள் ரெடி செய்யும் உடைகளை குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள்.

ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் முதல் நாள்,  இதுபோல் உடைகளை சேகரிப்பதை கோயில் நிர்வாகம் ஏலம் விடுவாங்க. இந்த வருடம் நான் எடுத்திருக்கிறேன். தினமும் 10 பேருக்கிட்ட கஷ்டப்படுறோம். கட்டுன காசுகூட கிடைக்குமான்னு தெரியல. காவிரியை சுத்தம் பண்ணுறோம் என்கிற நினைப்பில் பழைய துணி சேகரிக்கிறோம்" என்றபடி,  தான் சேகரித்த துணிகளை உலர வைக்க ஆரம்பித்தார்.

சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ