Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலி பணி நியமன ஆணை:கோவை வேளாண் பல்கலை அதிர்ச்சி!

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகச் சொல்லி, போலி பணி நியமன ஆணை வழங்கி பலரிடம் மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக் கழகம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இளைஞர்கள் சிலர், வேளாண் பல்கலையில், வேளாண் தகவல் பணியாளர் எனும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லி வேளாண் பல்கலைக்கழகத்தை நாடியுள்ளனர். இதனை பல்கலைக்கழக தனி அலுவலர் ஆராய்ந்த போது, அது போலி ஆணை என்பதும், வேளாண் தகவல் பணியாளர் என்ற பதவியே பல்கலைக்கழகத்தில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பதிவாளர் ஆனந்தகுமார், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வேளாண்மை பல்கலைகழகத்தில் புதியதாக வேளாண்மை தகவல் மையம் இருப்பதாகவும், வேளாண்மை தகவல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறி, போலி பணி நியமன ஆணை வழங்கி பல இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போலி நியமன ஆணையில் தற்காலிக வேளாண்மை தகவல் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 18 ஆயிரத்து 620 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பணி நியமன ஆணை பெற்றவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கல்வி சான்றிதழ் உடன் வருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பேரில் பல இளைஞர்கள் அணுகியதால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், அப்படி எந்தவித பணிநியமன ஆணையும் வேளாண்மை பல்கலைக் கழகம் வழங்கவில்லை என கூறியுள்ளது. இவ்வாறு பல இளைஞர்களுக்கு போலி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியவர்களைக்  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போலி பணி நியமன ஆணை வழங்கி பல இளைஞர்களிடம் பல இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் வேளாண்மை பல்கலைக் கழக அதிகாரிகளும் உடந்தையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பொதுமக்கள் இதுபோன்ற பணிநியமன ஆணைகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள பல்கலைக் கழக நிர்வாகம், போலி நியமன ஆணை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ச.ஜெ.ரவி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ