Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் ஃப்ரெண்டை போல யாரு மச்சான்..?'

காலையில் இருந்து முஸ்தபா முஸ்தபாவும், காட்டுக்குயிலு மனசுக்குள்ளவும், காது சவ்வு கிழிய கிழிய கேட்டு சிலிர்த்திருப்பீர்கள். காதுக்கு வேலை கொடுத்தது சரி, கொஞ்சம் சிறுமூளைக்கும் வேலை கொடுப்போம். கீழே இருக்கும் கேரக்டர்கள் எல்லாம் கட்டாயம் எல்லா க்ரூப்களிலும் இருக்கும். அந்தந்த கேரக்டர்களுக்கு உங்கள் நட்பு வட்டத்தில் யார் பொருந்துவார்கள் என கருப்பு ரீல் சுற்றி பிளாஷ்பேக் ஓட்டிக் கொள்ளுங்கள். ''இன்னிக்கும் அவங்களை பத்திதான் நினைக்கணுமா பாஸ்'' என்பவர்களுக்கு... ''அட இவனுகளை பத்தி நினைக்க கால நேரம் எல்லாம் பாக்கணுமாக்கும்?''

படிப்பு புல்டோசர்...

இந்தக் கேரக்டர் நம்கூடவேதான் திரியும். சரி, நம்மகூட சுத்துறது நம்மள மாதிரிதானே இருக்கும் என நினைத்தால் பரீட்சை நேரத்தில் மட்டும் ஆள் அட்ரஸே இல்லாமல் போவார்கள். கூகுள், யாகூ வைத்து தேடினாலும் பயனில்லை. அப்புறமென்ன, நம்மை பார்த்து காறித்துப்பும் மார்க்‌ஷீட் அவர்கள் மேல் பாசத்தை பொழியும். ஆனால் ஒரு விஷயத்தில் தெளிவானவர்கள் இவர்கள். புரிகிறதோ இல்லையோ, கான்செப்டை நமக்கு சொல்லித்தந்து அரியர் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்கள்.

ஸ்பான்சர் பகவான்...

க்ரூப்பிலேயே பெரிய கை இவன்தான். கேண்டீன், தியேட்டர், அவுட்டிங் என சுற்றும் இடங்களில் மற்றவர்களின் பாக்கெட் பாழடைந்த பங்களா போல் வெறிச்சோடிக் கிடந்தாலும், அனைவருக்கும் ஸ்பான்சர் செய்யும் வாட்ஸ் அப் யுகத்து கர்ணன் இவன். அவர்களுக்கும் மாசக்கடைசியா? சரி, கை முறுக்கு வாங்கியாவது ஷேர் பண்ணிப்போம் என அன்பைப் பொழிவார்கள். அவசரத்துக்கு வாங்கும் கைமாத்தை திருப்பிக் கேட்கும் பழக்கமே இவர்களிடம் இருக்காது.

கல்ச்சுரல் கிங்...

படிப்பு ரொம்ப சுமாராகத்தான் வரும். ஆனால் ஸ்போர்ட்ஸ் அல்லது கல்ச்சுரலில், ஏரியாவின் எங்க வீட்டுப் பிள்ளை இவன்தான். அதற்கேற்றார் போல தோரணையும் ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா இருக்கும். ஆனால் இந்த பிட்னஸ் ப்ரீக் உதவியால்தான் நாம் உடற்பயிற்சியோ ஜும்பா டான்ஸோ கற்றுக் கொண்டிருப்போம். மற்றவர்களை காட்டிலும் பெண் விசிறிகளும் இவர்களு அதிகமாக இருப்பார்கள்.

சாது சேது...

இந்த கேரக்டர் எப்படி நம் க்ரூப்பில் குப்பை கொட்டுகிறது என யாருக்குமே தெரியாது. ''அவுட்டிங்கா? அம்மா திட்டுவாங்க, சினிமாவா? சித்தி திட்டுவாங்க'' என அநியாயத்திற்கு வீட்டுப்பாடம் படிப்பார்கள். இவன் டிசைன் தப்பாச்சே, இவனை வச்சுக்கிட்டு என்ன பண்ண என சலித்துக்கொண்டாலும் ஓரங்கட்டவும் மனசு வராது. செல்ஃபிக்களில் நானும் இந்த கேங்தான் என பெருமையாக போஸ் மட்டும் தருவான்.

ஸ்டன்ட் மாஸ்டர்...

சப்ஜெக்டைவிட சண்டைகளில்தான் இந்த கேரக்டருக்கு இன்ட்ரஸ்ட் அதிகம். 'இறுதிச்சுற்று' மாதவன் போல விறைப்பாகவே திரிவார்கள். ஏதாவது பஞ்சாயத்து என்றால் நம் தரப்பில் இருந்து விழும் முதல் அடி அவனுடையதுதான். விழுப்புண்கள் எல்லாம் இவர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் போல. அதென்னவோ, இந்த கேரக்டர்கள் ரொமான்ஸ் ஏரியாவில் மட்டும் பயங்கரமாக சொதப்புவார்கள். ''பொண்ணு நம்மள தேடி வரணும்டா'' என சமாளிப்பு சட்னி வேறு அரைப்பார்கள்.

கலாய் மன்னன்...

நம் கேங்கின் கவுண்டமணி இந்த கேரக்டர்தான். வாய் சும்மாவே இருக்காது. வரும், போகும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்து, கவுன்ட்டர் கொடுத்து அலற விடுவார்கள். இவர்கள் இருக்கும் இடம் எப்போதுமே ஆதித்யா சேனல் போல கலகலவென இருக்கும். ஒரு காமெடி டயலாக் விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். அமைதியாய் இருக்கும் இடத்தில் திடீரென குபீர் கிளம்பினால் அன்னாரின் சேட்டையாகத்தான் இருக்கும். இவர்களால் ஏதாவது பஞ்சாயத்து வந்தால் இருக்கவே இருக்கிறான் நம் ஸ்டன்ட் மாஸ்டர்.

லவ் குரு...

கேங்கில் எவனுக்கு லவ்வில் பிரச்னை என்றாலும் சரணடைவது இவனிடம்தான். தனியாக அழைத்துப்போய் இவன் பொழியும் அட்வைஸ் மழையில் மரக்கட்டைக்குகூட ஏன்டா சிங்கிளா இருக்கோம் என குற்றவுணர்ச்சி வந்துவிடும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இவர்கள் சொல்லித்தரும் உபாயங்கள் பாகவதர் காலத்தை சேர்ந்தவையா, பாஸ்ட் புட் காலத்தை சேர்ந்தவையா என்பதெல்லாம் அவரவர்களின் லக்கை பொறுத்தது.

சுள்ளான்...

பார்க்க ரொம்ப சாதாரணமாய் சுள்ளான் போல இருப்பார்கள். ஆனால் ஏதாவது ரிஸ்க்கான காரியம் என்றால் யோசிக்காமல் 'பண்ணலாம் மச்சி' என முதல் ஓட்டு போடுவது இவர்கள்தான். அதனால் ஏதாவது பிரச்னை வந்தாலும் தெறித்து ஓடாமல் பின்னால் நிற்பார்கள். செம சப்போர்ட் அளிக்கும் பாசக்கார பயல்கள் இவர்கள். மாட்டும்போது பார்ப்பவர்களின் முதல் ரியாக்ஷன் ''இவனா இதைப் பண்ணது? நம்பவே முடியல'' என்பதாகத்தான் இருக்கும்.

சரக்கு பேபி...

தம், தண்ணி இது இரண்டும் இவர்களின் இரண்டு கண்கள் போல. புகையும் வாயுமாய், ஆல்கஹாலும் கல்லீரலுமாய் திரிவார்கள். பார்ட்டிகளில் அதிகம் சலம்பும் ஆட்களும் இவர்கள்தான். சிரிப்பது, அழுவது, மிரள்வது என இவர்கள் தரும் நவரச ஆக்டிங்கில் நடிகர் திலகமே தோற்றுப்போவார். ஆனால் மறுநாள் காலையில் இது எதுவுமே ஞாபகம் இருக்காது அவர்களுக்கு. ''அப்படியா மச்சான் பண்ணேன்?'' என குழந்தை போல கேட்பார்கள்.

'பீப்' பாய்...

வாயைத் தெரிந்தாலே செந்தமிழ் பெல்லி டான்ஸ் ஆடும். **** சூப்பர்டா நீ! என பாராட்டுவதில் தொடங்கி, **** அவன் சாவட்டும்டா! என கொலைவெறிக் குத்துப் போடுவது வரை சகல எமோஷன்களையும் கெட்ட வார்த்தைகளை சேர்த்தேதான் உரையாற்றுவார்கள். நமக்கு புதிது புதிதாய் கெட்ட வார்த்தைகள் சொல்லிகொடுக்கும் குருநாதர்கள் இவர்கள்தான். இவர்களோடு பழகிய பாவத்தில் வீட்டிலும் ஒரு ப்ளோவில் கெட்ட வார்த்தை பேசி வாங்கிக் கட்டுவோம்.

கண்டிப்பா இந்த கேரக்டர் எல்லாம் உங்க கேங்லயும் இருக்கும். அவங்க பேரை டேக் பண்ணி, ஷேர் பண்ணி பொன்மாலை பொழுதுகளை கொண்டாடுங்க மக்கா!

ஆங்... அப்புறம்... நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

- நித்திஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ