Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

32 தமிழர்களை மீட்க 2 வழக்கறிஞர்கள் நியமனம்! - முதல்வர் ஜெயலலிதா

சென்னை: ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 32 தமிழகர்களை மீட்க, 2 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து உள்ளார்.

சென்னையில் இருந்து கடந்த 4-ம் தேதி மாலை கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பதி சென்ற 32 தமிழர்கள், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 32 பேரும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 22 செல்போன்கள், 21 கோடாரிகள், 10 மூட்டை அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கைதான 32 பேரும்ம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தாங்கள் திருப்பதிக்கு சாமி கும்பிட வந்தோம் என்று தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த ஆந்திர போலீசார், 32 பேர் மீதும் ஆந்திர மாநில வன கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன், நேற்று 32 பேரையும் 2 வேன்களில் ஏற்றி கொண்டு ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அங்கு 32 பேரையும், 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி விஜயா உத்தரவிட்டார். இதையடுத்து 32 பேரும் சித்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் சென்னையைச் சேர்ந்த ஹரிபாபு என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அவர்கள் ரயில் பயணிகள்தான். ஆனால் வனக்குற்றங்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப்பகுதிக்கு அருகில் இல்லாத அவர்கள் மீது எப்படி வனக்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்ட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியதுடன், அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், 32 பேரையும் மீட்பதற்காக ஆந்திர அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து அரசு வழக்கறிஞர்கள் 2 பேரையும் தொடர்பு கொள்வதற்காக நியமித்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அரசு வழக்கறிஞர்ள் முகமது ரியாஸ், அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே திருப்பதியில் நடந்த செம்மர கடத்தல் வழக்கில் கைதான 188 தமிழர்களை வாதாடி மீட்டவர்கள். மேலும், தூத்துக்குடியிலிருந்து சென்ற 11 பேரை ஆந்திர காவல்துறை கைது செய்தபோது, அவர்களை விடுவித்ததிலும் வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அருள் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர். தற்போது 32 தமிழர்களை மீட்பதற்காக 2 வழக்கறிஞர்களும் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திரா செல்கிறார்கள். அதன்பின் 32 தமிழர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விவரங்களை ஆந்திர போலீசாரிடம் பெற்று அதன் அடிப்படையில் ஆந்திர மாநில நீதிமன்றத்தை அணுகி 32 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்னதாக, 32 தமிழர்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரி அவர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ