Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொத்தை எழுதி வாங்க சென்னையில் கடத்தப்பட்ட பெண் ஆம்பூரில் மீட்பு!

வேலூர்: காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சொத்தை எழுதி வாங்க, சென்னையில் கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் ஆம்பூரில் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சசிகலா, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரும், அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ள ரமேஷும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விஷயம், சசிகலா வீட்டிற்கு தெரியவரவே அவரது பெற்றோர் சசிகலாவை கண்டித்திருக்கிறார்கள்.

எங்கே தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்த சசிகலா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் ரமேஷூடன் கடந்த மாதம் சென்னை மாங்காடு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், 'எங்கள் வீட்டு ஆட்களால் ஆபத்து இருக்கிறது' என்று அன்றே பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவர் புகாரும் அளித்திருக்கிறார்.

திருவேற்காடு பகுதியில் குடியேறியிருந்த இவர்கள், நேற்று பூந்தமல்லிக்கு ஷாப்பிங்குக்காக ஜோடியாக வந்துள்ளனர். இவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன்கள், பூந்தமல்லியில் அவரின் கணவர் ரமேஷை தள்ளிவிட்டு விட்டு சசிகலாவை காரில் கடத்திக் கொண்டு 'எங்களை பின் தொடர்ந்தால் சசிகலா கதையை முடித்து விடுவோம்’ என்று ரமேஷை மிரட்டிவிட்டு சென்னை–பெங்களூரு பைபாஸ் சாலையில் பறந்துள்ளார்கள்.

உடனே ரமேஷ், திருவேற்காடு காவல் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியை காரில் கடத்திக்கொண்டு எந்த வழியாக போகிறார்கள் என்ற தகவலோடு புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக வேலூர் போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்து உஷார் படுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை கடத்தி கொண்டு செல்லும் கார், பள்ளிகொண்டா டோல்கேட்டை கடந்து வருவதை அறிந்த போலீசார், ஆம்பூர் அருகே தடுப்புகள் அமைத்து அந்த காரை மடக்கி பிடித்திருக்கின்றனர். அப்போது காரில் சசிகலா, கத்தி முனையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருவேற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கணவர் ரமேஷுடன் சேர்த்து வைத்துள்ளனர் போலீசார்.


மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சசிகலாவின் பெரியப்பா மகன் நந்தகுமார் மற்றும் அவரின் ஊர் நண்பர்கள் என்பது போலீசாரின் விசாரனையில் தெரிய வந்திருக்கிறது. அத்துடன், சசிகலா பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதால், அதை எல்லாம் எழுதி வாங் சசிகலாவை கடத்தி வந்ததாக அவர்கள் போலீசாரிடம் கூறி இருக்கின்றனர்.

- அ.அச்சணந்தி
படம்: ம.சுமன்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ