Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பில் அலட்சியம்: தொழிலதிபர் உயிரைப் பலிவாங்கிய பாரா சைலிங்

சாகச விளையாட்டுகளில் ஒன்று பாரா சைலிங். ஒரு ஆளுக்கு ஒருமுறை பறக்க 500 முதல் ஆயிரம் வரை கட்டணமாக  நிர்ணயிக்கப்படும். கிட்டத்தட்ட காஸ்ட்லியான  கேம்தான்  இது.

வாகனம் ஒன்றில் பாராசூட் கட்டப்பட்டிருக்கும். பயணிப்பவரின் இடுப்பில் பாராசூட்டின் ஹூக்கை கட்டி விட்டு, மேலே ஏற்றி 100 அடி உயரத்தில் பறக்க வைப்பார்கள். அட்டகாசமான உணர்வை அளிக்கும் சாகசப் பயணம் தான் இது. ஆனால் முழுமையான பாதுகாப்போடு நடத்தப்படும் வரை. இல்லாவிட்டால் விபரீதம் தான். கோவையில் அண்மையில் நடத்தப்பட்ட பாரா சைலிங் சாகசப்போட்டி இப்படிப்பட்ட உயிரைப் பறிக்கும் விபரீதத்தில் முடிந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரியின் பொன்விழாவினையொட்டி கடந்த 5ம் தேதி 'பாரா சைலிங்' சாகசப்போட்டி நடந்தது. இதனை கடலோர காவல்படை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையத்தின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைப்பின் நிர்வாகி கிளைடர் பாபு தொடங்கி வைத்தார். பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி, முதல்நாளிலேயே முடிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டி நடத்த காற்றின் வேகம் தடையாக இருக்கிறது என்று காரணம்  சொல்லப்பட்டது.

ஆனால் அருகில் உள்ள கொடீசியா மைதானத்தில் தொடர்ந்து இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி நேற்று(ஞாயிறு)மதியம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த மல்லேஸ்வரராவ் என்பவர் பாராசைலிங் சாகசப்பயிற்சிக்கு சென்றார். தரையில் இருந்து சுமார் 60 அடி உயரத்துக்குச்  சென்ற போது திடீரென மல்லேஸ்வரராவ் சத்தம் போட்டார். கீழே உள்ளவர்கள் என்ன பிரச்னை என யூகிப்பதற்கு முன்னர் 60 அடி உயரத்தில் இருந்து மல்லேஸ்வர ராவ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.  இடுப்பில் பொருத்தப்பட்ட பெல்ட் கழன்றதால் விபத்து ஏற்பட்டதாகக்  கூறப்படுகிறது. அதிகப்படியான காற்றும் விபத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எந்த அனுமதியும் பெறாமல், மிகவும் அஜாக்கிரதையாக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "பாரா சைலிங் சாகசப்பயிற்சிக்கு காவல்துறையில் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெறவில்லை. அதேபோல் அருகில் விமான நிலைய இயக்குனரிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் பாராசைலிங் சாகசம் நடத்தப்பட்டுள்ளது," என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிளைடர் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கடலோர காவல்படை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும், பாரா சைலிங் சாகசப்பயிற்சியில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் காற்றின் வேகம் காரணமாக  பறக்கும் முயற்சியை கைவிட்டுள்ளார் சைலேந்திரபாபு.



ச.ஜெ.ரவி
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ