Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது கூடங்குளம் அணு உலை!

திருநெல்வேலி: கூடங்குளம் முதல் அணு உலை நாளை மதியம் 3 மணிக்கு நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட உள்ளது.

ரஷ்ய ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணு உலை அமைக்க 1988 நவம்பர் 20 ம் தேதி, அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி, ரஷ்ய அதிபர் கோர்ப்பச்சேவ் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  பின்னர் இருநாடுகளிலும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளால் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படாமல்  கிடப்பில் போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1998 ஜூன் 21 ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இந்த அணு உலையில் இருந்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. 12,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத்  திட்டமானது 2008 ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திட்டமிட்டபடி இந்த அணு மின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்  சேர்ந்த மக்களின் கடுமையான எதிர்ப்பால் இந்தத்  திட்டத்துக்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தொடர் உண்ணாவிரதம், போராட்டம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறின. பின்னர், ஒருவழியாக போராட்டங்கள் முடிவுக்குக்  கொண்டு வந்த பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது 22,000 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் 2002 ல் முடிவடைந்தன. அதன் பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிகள் செய்யப்பட்டு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெற்று 2013, அக்டோபர் 22 ம் தேதி மின் உற்பத்தித் தொடங்கப்பட்டது.  அன்றே இந்த  மின்சாரமானது பவர் கிரீட்டில் இணைக்கப்பட்டது.

இதனிடையே முதல் அணு உலையானது அடிக்கடி பழுதடையும் சம்பவங்களும் நடக்க தொடங்கின. ஒரு முறை டர்பனில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டதால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், இரண்டாவது அணு உலையில் இருந்து உதிரிப்பாகங்கள் எடுத்து முதல் அணு உலையில் பயன்படுத்தப்பட்டது. வணிக நோக்கத்தில் மின்சார உற்பத்தி நடைபெற்ற பின்னர் நான்கு முறை இது போல மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு முறை பராமரிப்புக்காக 6 மாதங்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தற்போது முதல் அணு உலையானது அதிகபட்ச உற்பத்தி அளவான 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பவர் கிரீட் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அணு உலை தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு 563 மெகாவாட், கேராளாவுக்கு 133 மெகாவாட், கர்நாடகாவுக்கு 221 மெகாவாட், தெலுங்கானாவுக்கு 50 மெகாவாட், பாண்டிச்சேரிக்கு 33 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையிலும் இந்த அணு உலையில் இருந்து 6,495 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டியில் மட்டும் முதலாவது அணு உலையில் இருந்து 2,150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இந்த அணு உலை முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இதனை நாட்டுக்கு அர்பணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் இந்த அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ