Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்திற்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டிப்பு!

விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,  நேரில் ஆஜராகாத தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டவர்களுக்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து அவதூறாகப்  பேசியதாக அப்போது புகார் எழுந்தது.

அதேபோல, 2014-ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டை பகுதியில் நடைபெற்ற தேமுதிக கட்சி மாநாட்டுக் கூட்டத்திலும் விஜயகாந்த், அவரின்  மனைவி பிரேமலதா மற்றும் அப்போது எம்எல்ஏக்களாக இருந்த எல்.வெங்கடேசன், பார்த்தசாரதி, ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்தும் அவதூறாகவும் பேசியதாக அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதேபோல், ஒலக்கூரில் கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்திலும், முதல்வர் ஜெயலலிதாவை எல்.வெங்கடேசன் அவதுறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற்றதோடு உச்ச நீதிமன்றத்திலும் தடையாணை பெற்றிருந்தனர். இதனால் இந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவதூறு வழக்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் தொடர்புடைய விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகியோர் ஜூலை 26-ம் தேதி வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையாணைகள் தொடர்பான ஆவணங்களைச்  சமர்ப்பித்து விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 26-ம் தேதி விஜயகாந்த், பிரேமலதா வராத நிலையில் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் தொடர்ந்து ஆஜராகாமல் வழக்கை தாமதப்படுத்தி வருவதாக நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த முறை இந்த வழக்கின் விசாரணைக்கு விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் கண்டிப்பாக ஆஜராகி, தடை ஆணை பெற்றுள்ளது குறித்த ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று சொல்லி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி நேற்று(செவ்வாய்) காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.வெங்கடேசன் மட்டுமே ஆஜராகியிருந்தார். விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோர் ஆஜராகவில்லை.

அதனால்," முன்புதான் விஜயகாந்த் பிசியாக இருந்தார். இப்போது என்ன ? சென்னையில் இருந்து கிளம்பினால் மூன்று மணி நேரத்தில் விழுப்புரம் வந்துவிடலாம். அவர்கள் நேரில் ஆஜராகமாட்டார்களா ?" என்று கண்டிப்புத் தெரிவித்த நீதிபதி சரோஜினிதேவி, வருகிற 16 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

- ஜெ.முருகன்
படங்கள்: தே.சிலம்பரசன்

   
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ