Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்திய மாணவர்கள்!

கோயில் நகரமான மதுரைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், ஒரு கோடிக்கும் மேலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் விஜயம் செய்கின்றனர். மதுரையில் நுழைந்ததும் அவர்களின் கண்களில் படுவது விதவிதமான சுவர் விளம்பரங்கள்,விளம்பர போர்டுகள்தான். அதிலும் பொதுச் சுவர்கள் அனைத்திலும் லெட்டர்பேடு அரசியல் கட்சிகள் தொடங்கி ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் செய்துள்ள விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. சாலையோரங்கள் கழிவு நீர் மற்றும் குப்பைகள் குவியும் இடமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. இது மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளிள் மத்தியில் பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் மதுரை மாநகராட்சிக்கு வந்தன. இதனை அடுத்து மதுரையை தூய்மையான  நகரமாக்கவும், பொது இடங்களில் அசுத்தம் சேராமல் சுத்தமாகப் பராமரிக்கும் வகையிலும் 'தூய்மை மதுரை இயக்கம்' என்ற  திட்டத்தின் கீழ்,  மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த, அவர்களைக் கொண்டே பொதுச் சுவர்களில், மதுரையின் கலாச்சாரப் பெருமைகளை வரையவும் மாநகராட்சி புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக,  மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் பொதுச் சுவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளைக் கொண்டு கண்கவர் ஓவியங்கள் வரையும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கு பெற்று, மதுரையின் எழில் மிகு தோற்றத்தை ஓவியங்களாகத் தீட்டினர்.
 
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,"மதுரை மாநகராட்சியில் தூய்மை, பசுமை பிரசாரத்தை மாணவர்களிடம் இருந்து தொடங்கியுள்ளோம். இந்தப்  போட்டியின் மூலம் பள்ளிக் குழந்தைகளின் ஓவியத் திறமையை வெளிப்படுத்தவும், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு கிடைத்ததாக கருதுகிறோம்.

மேலும்  தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மதுரை மாநகர் முழுவதும் உள்ள பொதுச் சுவர்களில், இது போன்ற ஓவியங்களை வரைந்து, மதுரையை  பசுமையாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

- வெ.வித்யா காயத்ரி
(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ