Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ராம்குமாரை இப்படித்தான் வீடியோ எடுக்க வேண்டும்!' - உயர் நீதிமன்றம் நிபந்தனை!

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ராம்குமாரை வீடியோ எடுக்க காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 'ராம்குமாரை எப்படியெல்லாம் வீடியோ எடுக்க வேண்டும், வீடியோ எடுத்த பின்னர் அதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 ம் தேதி மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு ஆஜரான வழக்கறிஞர் ராமராஜ், " சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை ஏற்கனவே  காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து விட்டனர். இதன்பின்னர், ராம்குமாரை வீடியோ படம் எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் மனு தாக்கல் செய்தோம். எங்களது கோரிக்கையை நிராகரித்த எழும்பூர் நீதிமன்றம், ராம்குமாரை வீடியோ படம் பிடிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து இந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால், ராம்குமாரை காவல்துறையினர் வீடியோ படம் பிடிக்கப் போகிறார்கள். எனவே, இதற்கு தடை விதிக்கவேண்டும். எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்"  என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, " உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான், காவல்துறையினரும் ராம்குமாரை காவலில் எடுத்துள்ளனர். இதில் சட்டவிரோதம் இல்லை. எனவே, வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமாரை வீடியோ எடுக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தார். அதே சமயம், காவல்துறைக்கு பல நிபந்தனைகளை விதித்தார். அதில், "ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுக்க வேண்டும். போலீஸ் புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் வீடியோ உள்ளிட்டவைகளை எடுக்க வேண்டும். வீடியோ உள்ளிட்டவற்றை எடுத்த பிறகு, அதை எழுப்பூர் நீதிமன்றத்திக்கு அனுப்ப வேண்டும். வழக்கில் விசாரணை அதிகாரிக்கு தேவையான வசதியை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும். வீடியோ உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட ஆய்விற்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வீடியோ எடுக்க அனுமதி அளித்த எழும்பூர் நீதிமன்ற உத்தரவில் சிலவற்றை நீதிபதி ரத்து செய்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ