Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னிடமே ரூ.10 கோடி பேரம் பேசினார்கள்: தேமுதிக பார்த்தசாரதி ஷாக்!


தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சிப் பிரமுகர்கள்  என்னிடமே ரூ.10 கோடி வரை பேரம் பேசினார்கள் என்று தேமுதிகவின் முன்னாள் எம்.எல். ஏ. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணி  படு தோல்வி அடைந்தது. அதன் பின் தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் ,தொண்டர்களும் திமுக பக்கமும், அதிமுக பக்கமும்  தங்கள் கூடாரத்தை மாற்றினார்கள்.தற்போது வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தலைமை, ஆலோசனைக்  கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும்  கட்சியைப்  பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக குமரிமாவட்டம் தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் இளங்கோவனும்,தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதியும் நாகர்கோவில் வந்திருந்தனர்.

கூட்டத்தில், குமரிமாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலரும் மேடையில் தங்கள் ஆதங்கத்தைக்  கொட்டினர். தேமுதிகவில் இருந்து போன சந்திரகுமார் உள்ளிட்டோரைக் கடுமையாக விமர்சித்துப்பேசினர். மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்து இருக்க கூடாது என்று காரசாரமாகப் பேசினார்கள். அதன்பின் தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி  பேசும் போது,

"உள்ளாட்சித்  தேர்தலில், ஆலோசனை கருத்துக்கள் கேட்டு கட்சியைப்  பலப்படுத்த, கேப்டன் ஆசியோடு வந்திருக்கிறோம். ஒன்றியம்,நகரம்,மாவட்டம் என்று அவரவர் பார்வையில் இருந்து மாற்றிப்  பார்க்கணும், மாற்றி யோசிக்கனும். தமிழ்நாட்டில் தொண்டர்கள் உண்மையாக இருக்கிற ஒரே கட்சி தேமுதிக தான்.திராவிட கட்சிகளே பயந்து ஒதுங்கிய இடைத் தேர்தலை சந்தித்தவர்கள் நாம். திமுகவும்.அதிமுகவும் நமக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். கேப்டன் வீட்டில் வருமானவரி துறை ரெய்ட் நடத்தினார்கள். ஒழுங்காக வருமானவரி கட்டியவர் நம் கேப்டன். 2011 ல் தொண்டர்களின் கருத்தை கேட்டு கேப்டனை அழிக்க நினைத்த திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைத்தோம். அந்த கூட்டணியில் 234 தொகுதியிலும் சூறாவளியாகச்  சுழன்று பிரசாரம் செய்த ஒரு நபர் நம்ம கேப்டன் தான். தேமுதிக வினால் அதிமுக ஆட்சிக்கு வந்தது. சட்டமன்றத்திற்கு சென்ற போது அதிமுக அமைச்சர்கள் தேமுதிகவால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, எங்கள் கைகளைப்  பிடித்துக் கொண்டு சொன்னார்கள்.

தடைகளைத்  தாண்டி கட்சி கேப்டன் வளர்த்தார்.ஜெயலலிதாவைக்  கண்டு எல்லோரும் பயப்படும் வேளையில் பயப்படாத ஒரு தலைவர் கேப்டன். இந்த தேர்தலில் நாங்கள் எல்லோரும் திமுக கூட்டணிக்குப்  போகலாம் என கேப்டனிடம் சொல்லியிருந்தோம். ஆனால் மக்கள் நலக் கூட்டணி கேப்டனை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து அழைத்தது. 500 ரூபாய் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி,1000 ரூபாய் கொடுத்தவர்கள் ஆளும் கட்சியானார்கள். தேமுதிகவின் வாங்கு வங்கி உண்மையான தொண்டர்கள் தான். நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.நமக்குள் கோஷ்டி பூசல் இருக்க கூடாது.இது நமது கட்சியைப்  பலவீனப்படுத்தும்.எதிர்காலம் நமது வெற்றிக்காகக்  காத்திருக்கிறது.பேசுவதை விட்டு விட்டு செயலில் காட்டுவோம்.கட்சியை விட்டுப்  போனவங்களைப்  பற்றி கவலை வேண்டாம்.நமது தலைவரின் வலதுகை பக்கத்திலும் ,அருகிலும் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள்.இப்போது திமுகவில் ஸ்டாலின் பின்னாடி,கருணாநிதியின் பின்னாடி மூணாவது வரிசையில் தலையைத்  தூக்கி  எட்டி பார்த்து போஸ் கொடுக்கிறார்கள்.

தேமுதிகவில் சாதாரண தொண்டனுக்கும் மரியாதை உண்டு ஆனால் அது மற்ற கட்சியில் கிடையாது.அங்கே எதிர்பார்க்கவும் முடியாது.என்னிடமே 10 கோடிவரை பேரம் பேசினார்கள்.என்னை தமிழ்நாட்டுக்கு தெரியும்படி வளர்த்தவர் கேப்டன் .அவருக்கு துரோகம் செய்ய முடியாது.கேப்டன் நடித்த  படத்தை பார்த்து மன்றம் வைத்தோம் .அப்போது தேமுதிக உருவாகும் என்றே நமக்கு தெரியது.பல நெருக்கடிகளின் நிர்பந்தத்தால் தேமுதிக உருவானது .உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும்.கேப்டன் பிறந்த நாளை  சிறப்பாக ஒவ்வொருவரும் கொண்டாடுங்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சி வேலை செய்யுங்கள். சுவர் விளம்பரங்களில் கண்டிப்பாக முரசு சின்னம் போடுங்கள்.

மீண்டும் உள்ளாட்சி தேர்தலில்  நாம் முரசு சின்னத்திலே தான் போட்டியிட போகிறோம்.தேர்தலில் செலவுக்கு பணம் இல்லை என்று யாரும் நகைகளையோ ,நிலங்களையோ விற்க கூடாது என்று கேப்டன் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார்.இருப்பதை வைத்துக் கொண்டு கேப்டன் பெயரை சொல்லி ஓட்டு கேட்போம்.மக்கள் பணி செய்வோம் .உள்ளாட்சியில் ஆட்சி செய்வோம்" என்று பேசினார்.

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ