Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராட்டக் களத்தில் கரும்பு விவசாயிகள்: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?

மிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1589 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த ஆலைகள், 2013-14-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.273 கோடியும், 2014-2015 நிலவரப்படி ரூ.286 கோடியும், 2015-2016 ஆண்டு நிலவரப்படி ரூ.1,030 கோடியும் பாக்கி வைத்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் மானிய கோரிக்கைகளில் கரும்புக்கு மாநில அரசே விலை நிர்ணயிக்கும். ஆனால், அந்த பணத்தைக் கூட தனியார் ஆலைகள் கொடுக்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர், விமலநாதன், " சென்ற வருடம், 'சர்க்கரை விலை குறைவினால் மாநில அரசு அறிவித்த விலையை கொடுக்க முடியவில்லை' என்ற தனியார் ஆலைகள் தெரிவித்தன. உண்மையில் சென்ற வருடம் சர்க்கரை விலை குறைவுதான். ஆனால், தனியார் ஆலைகள் நஷ்டத்தில் இயங்க வாய்ப்பில்லை, கண்டிப்பாக கணிசமான லாபத்தை பெற்றிருக்கும். இந்த வருடம் வெளிச்சந்தையில் சர்க்கரை விலை அதிகமாக இருக்கிறது, கண்டிப்பாக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு லாபம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த தனியார் ஆலைகள், 'இன்னமும் எங்களுக்கு விலை போதவில்லை' என பாடிய பாட்டையே பாடிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஒரு அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதேபோல கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1999-ல் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் ஒரு வழக்கு தொடுத்தது. அதில், மானிய விலையை ஏற்கமாட்டோம் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால், அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அந்த வழக்கில் தமிழக அரசு வாதாடி, மாநில அரசு நிர்ணயிக்கும் விலையை கண்டிப்பாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்' என அறிவித்தது. அப்போது இதனை செய்தவர் இதே முதல்வர் ஜெயலலிதாதான். அப்போது துணிச்சலுடன் முடிவெடுத்த முதல்வர், கடந்த இரண்டு வருடங்களாக நிலுவைத்தொகையை தராமல் இருப்பதனை கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை. தமிழக அரசு, தனியாக இதற்கென ஆட்களை நியமித்து கரும்பு விவசாயிகளுக்கு உரிய பணத்தினை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.

கடந்த 2011-12 -ம் ஆண்டு 6,80,000 ஏக்கராக இருந்த கரும்புச் சாகுபடி நிலப்பரப்பு, 2015-16-ம் ஆண்டு நிலவரப்படி, 4,53,000 ஏக்கராக குறைந்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் அராஜகத்தை இன்னும் கண்டுகொள்ளவில்லை எனில், கரும்புச் சாகுபடி முற்றிலுமாக குறையும்"  என்றார்.

இந்நிலையில்,  மாநில அரசின் விலை நிர்ணயத்திற்கு எதிராக செயல்படும் சர்க்கரை ஆலைகளை கண்டித்து, கரும்பு விவசாயிகள் விழுப்புரத்தில் கண்டன போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய கரும்பு விவசாயிகள் சங்கத் செயலாளர் ரவீந்தரன், " இப்பிரச்னையில் அரசிடம் இருந்து தகுந்த நடவடிக்கை இல்லாமல் இருந்தால், நாங்கள் வரும் 19-ம் தேதி சென்னை கோட்டையை நோக்கி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயார்" என்று  கூறினார்.

ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இப்போது கரும்பு விவசாயிகளை இந்த சர்க்கரை ஆலைகள் படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. இதில் முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும், என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

- துரை.நாகராஜன், மு.சங்கீதா, ச.புகழேந்தி
(மாணவப் பத்திரிகையாளர்கள்)
படங்கள்: தே.சிலம்பரசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ