Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யானைகள் தினம்: மூர்த்தியை நினைவு கொள்வது அவசியம்!

யிலில் அடிபட்டு யானைகள் பலியாவது, வனத்துறையின் அலட்சியத்தால் யானைகள் இறப்பு அதிகரிப்பு என பல சர்ச்சைகளை தமிழக வனத்துறை இப்போது எதிர் கொண்டு வருகிறது. சுமார், 15 ஆண்டுகளுக்கு முன், உடலில் 13க்கும் மேற்பட்டத் துப்பாக்கி ரவைகளுடன் தமிழக எல்லைக்குள் புகுந்த மக்னா  யானையை,  கடும் போராட்டம் நடத்தி  காப்பாற்றிய வரலாறும் தமிழக வனத்துறைக்கு உண்டு.

 தமிழக, கேரள, கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானைதான் இருக்கிறது. ஒரு ஆண் யானை இறந்தால், அது யானை இனத்துக்கே மிகப் பெரிய இழப்பு. யானையில் 'மக்னா' என்ற ஒரு ரகமும் இருக்கிறது. இந்த வார்த்தையே புதியதாக இருக்கிறதல்லவா. ' மக்னா ‘ என்பது தந்தமில்லாத ஆண் யானை அவ்வளவுதான்.

ஆயிரம் யானைகளுக்கு ஒரு 'மக்னா' யானைதான் பிறக்கும். மக்னா யானைகள் என்றால் மூர்க்கம் நிறைந்தவை என்ற ஒரு கருத்து  மக்களிடையே இருக்கிறது. அதற்கேற்றார் போல் ஒரு சம்பவமும் 15 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்தது. மற்றபடி, மக்னா யானைகளும் பிற யானைகளைப் போல அமைதியை விரும்புபவையே.

கடந்த 1999 ம் ஆண்டுவாக்கில் கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் மக்னா யானை ஒன்று சுற்றித் திரிந்தது. வனத்தை ஒட்டிய பகுதிக்குள் செல்பவர்களை தாக்கியது. யானைகளின் இருப்பிடத்திற்குள் மனிதர்கள் புகுந்தால் ஆபத்துதானே. அப்படித்தான் இந்த மக்னாவும் பல மனிதர்களை கொன்றுவிட்டது. வயநாடு, கூடலூர் மாவட்டத்தில் 22 பேர், இந்த யானைத் தாக்கியதால் உயிரிழந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த யானையை சுட்டுக் கொல்லவும் கேரள அரசு  உத்தரவிட்டது. கேரள வனத்துறை துப்பாக்கியும் கையுமாக காட்டுக்குள் புகுந்து, மக்னாவைத் தேடியது. கண்ட போதெல்லாம் யானையை நோக்கி சுட்டார்கள். அப்படி அதன் உடலில் 13 துப்பாக்கி ரவைகள் இருந்தன. ஆனாலும் மக்னா யானை அசரவில்லை. ஆடி அசைந்து தமிழகப் பகுதியான கூடலூருக்குள் நுழைந்து விட்டது.

காயத்துடன் கிடந்த மக்னா குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே கேரள வனத்துறையினர் தமிழக வனத்துறைக்கு தகவல் அளித்திருந்ததால்,  தகுந்த முன்னேற்பாட்டுடன் மக்னாவை தமிழக வனத்துறையினர் எதிர்கொண்டனர் . மயக்க ஊசிப் போட்டு பிடித்தனர். கூடலூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு முகாம் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நான்கு கும்கி யானைகள் புடை சூழ, மக்னாவை சுற்றி வளைத்து  நடத்தியே கூட்டி வந்தனர்.

பின்னர் கரோலில் அடைத்து, அதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூர்த்தி என பெயரிடப்பட்டு, கும்கி யானைகளுக்கான பயிற்சியையும் பெற்றது மூர்த்தி. தற்போது 55 வயதான மூர்த்தி யானை, முதுமலையில் சாந்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. திருமாறன் என்பவர் இதன் பாகன். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை, முதுமலை முகாமுக்கு சென்ற போது,  மூர்த்தி யானைக்கு உணவு அளித்தும் மகிழ்ந்துள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ