Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டத்திருத்தம்: வழக்கறிஞர்கள் போராட்டம் தேவையா...?

ழக்கறிஞர்கள் சட்டம் 1961,  பிரிவு 34(1)ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் செய்துள்ள சட்ட திருத்த விதிகளை திரும்ப பெறக் கோரி,  கடந்த 2 மாத காலமாக வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தினால் தமிழக நீதிமன்றங்களில் அசாதாரண நிலை நிலவி வருகிறது.

கடந்த மாதத்தில் ஒருநாள் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவிட்டு, அவர்கள் வீடு திரும்பியபோது சர்ச்சைக்குரிய சட்டதிருத்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தது உயர் நீதிமன்றம். ஆனால் அது தற்காலிகம் என குறிப்பிடப்பட்டதால் வழக்கறிஞர்களை அது கொஞ்சமும் சமாதானப்படுத்தவில்லை.

கொஞ்ச நாட்கள் ஆறப் போட்டால், பிரச்னை ஓய்ந்துவிடும் என எண்ணிய நிலையில், வழக்கறிஞர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் அது கனன்றபடிதான் உள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் இரண்டு மாதத்திற்கு மேலாக போராட்டம் தொடர்கிறது; உயர் நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நீடிக்கிறது. சட்ட நகல் எரிப்பு, மனிதச் சங்கிலி,  ரயில் மறியல்,  உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு, உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம்  என்று வழக்கறிஞர்களின் போராட்டம் தினம் ஒரு வடிவம் எடுத்துக்கொண்டிருக்கிறது. வரும் சுதந்திர தினத்தன்று காந்தி , அம்பேத்கர் சிலைகள் முன்பு  'நீங்கள் வாங்கித் தந்த சுதந்திரம் பறிபோய் விட்டது' என்று மனு அளிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.

வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் பார் கவுன்சிலும், உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் இடை நீக்கம், கட்சிக்காரர்களே வழக்கில் வாதிட,  குறுக்கு விசாரணை செய்ய அனுமதி, நீதிமன்றத்திற்கு வராத  வழக்கறிஞர்களின் வக்காலத்து உரிமம் ரத்து, போலீஸ் பாதுகாப்பு என்று கொந்தளிப்பு காட்டுகிறது இந்த விவகாரத்தில்.

கொந்தளிப்பை ஏற்படுத்திய திருத்தங்கள்

வழக்கறிஞர்கள் சட்டம் 1961, பிரிவு 34(1)ல்  சென்னை உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்திற்கு எதிராக, முறை தவறி செயல்படும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 14-பி அடிப்படையில், உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்றம் மற்றும் அனைத்து சார்பு நீதிமன்றங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்படுவார்.

மாவட்ட முதன்மை நீதிபதிக்கு முன்பாக நெறி தவறி நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அந்த மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்படுவார். எந்த சார்பு நீதிமன்றத்திலும் நெறி தவறி நடக்கும் வழக்கறிஞர் குறித்து, அந்த சார்பு நீதிமன்ற நீதிபதி, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். அந்த வழக்கறிஞரை, அந்த மாவட்டத்தில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் தொழில் செய்ய தடை விதிக்க மாவட்ட முதன்மை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

வழக்கஞர்கள் சட்டப் பிரிவு 14-ஏ.யின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, உயர் நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பி அந்த வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிப்பதற்கு முன், அவர் தொழில் செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணை முடிவடைந்தவுடன் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவரை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும். தவறு செய்ததாக கருதப்படும் வழக்கறிஞர்கள் மீதான மீது நடவடிக்கையை,  முன்பு தமிழ்நாடு பார் கவுன்சில் மட்டுமே எடுத்து வந்தது. இப்போது கொண்டுவரப்பட்ட இந்த சட்ட திருத்தத்தால் பார்கவுன்சிலின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றம் கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
 
நீதித்துறையில் நடந்துவரும் இந்த ஆடுபுலி ஆட்டத்தில் பாதிப்பு பொதுமக்களுக்கு. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்.

வழக்கறிஞர்களின் போரட்டம் தேவையா என்ற கேள்வியை வழக்கறிஞரும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்டவருமான இரா.சிவ சங்கரிடம் முன்வைத்தோம்.

“இந்த போராட்டம் மிக அவசியமானது. இது எங்களின் உரிமை. இந்த போராட்டத்தால்  வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேநேரத்தில் இதை அனுமதித்தால் வழக்கறிஞர் தொழிலில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை எதிர்காலத்தில் உருவாகிவிடும். அதனால் இந்த போராட்டம் தவிர்க்க முடியாதது.

வழக்கறிஞர்களான, லண்டனில் படித்த காந்தி, நேரு, அம்பேத்கர்,  அப்போதே ஆயிரக்கணக்கில் சம்பாதித்த ராஜாஜி,  சொத்தை விற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டிய. வ.உ. சிதம்பரனார் போன்ற தலைவர்கள் வாழ்வாதாரத்தை பற்றி  நினைத்திருந்தால் சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்து இருக்க முடியுமா, அவர்கள் சுதந்திரம் வாங்கி தரவில்லை என்றால் இன்று இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்திருக்க முடியுமா? வழக்கறிஞர்களும் இந்த சமூகத்தின் பெரும்பான்மை அங்கம். எங்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடாமல் யார் போராடுவார்கள்...? நீதித்துறையிடமிருந்து எங்களாலேயே எங்கள் உரிமையை மீட்க முடியவில்லையென்றால், நாளை மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம் என்பது அர்த்தமற்றதாகிவிடும்.

வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே  இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்ததாக சொல்கிறார்கள். 'அன்றைய சூழ்நிலையில் நீதிபதிகளை எதிர்க்கக் கூடாது' என்ற அச்சத்தில், சில சங்க பிரதிநிதிகள் சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரும்பான்மை வழக்கறிஞர்கள் கருத்து இதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான் நிஜம். முன்னாள் பார் அசோசியேஷன் தலைவர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக தாக்கப்பட்டபோது வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆனால் இன்று அவரே நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறார் ”என்றார் ஆவேசத்துடன்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வ.ராகவாச்சாரியிடம் பேசினோம். “இந்த போராட்டம் தேவையில்லாதது, முதலில் இந்த சட்ட திருத்தத்தை உயர் நீதிமன்றம் கொண்டு வந்து இருக்கக் கூடாது. நீதிமன்றத்திற்கு உள்ளே நடக்கும் தவறுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியும், நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது, ஒரு வழக்கறிஞரின் நடவடிக்கையை கண்காணிப்பது எல்லாம் நீதிமன்றத்தின் பணி அல்ல; வழக்கறிஞர்களை கட்டுப்படுத்துவதற்கு பார் கவுன்சில் உள்ளது.  அதட்டிப் பேசுவது, கண் புருவத்தை உயர்த்திப் பேசுவது எல்லாம் தவறு என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏற்க முடியாதது.

மாவட்ட நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்களின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் தந்து இருக்கக் கூடாது.  அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராடினார்கள், அதனால் அந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்து விட்டார். சட்டத்தையும் மறுபரிசீலனை செய்வதாக சொல்லிவிட்டார். அதன் பிறகும் போராடுவது சரியானது அல்ல. கற்றறிந்த வழக்கறிஞர்கள் முதலில் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் நம்ப வேண்டும். படித்த வழக்கறிஞர்களே நீதிபதிகளின் அறிவுரைகளை மதிக்கவில்லை என்றால், நாளை எப்படி தவறு செய்யும் சாதாரண பொதுமக்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் , மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகளிடம் முறையிட முடியும்... அவர்களும் நீதிபதிகள் மேல் நம்பிக்கை இல்லை சொன்னால் நமது நீதித்துறை அமைப்பு சிதைந்து விடாதா?

இதுதான் நீதித்துறைக்கு நாம் செய்யும் நன்றிக் கடனா... நாளை நீங்கள் நீதிபதிகளாக ஆகும்போது உங்கள் அறிவுரையை வழக்கறிஞர்கள் ஏற்கவில்லை என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?  வழக்கறிஞர்கள் இடைநீக்கத்திற்கு பின்னாலும் அரசியல் உள்ளது. பார் கவுன்சில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன் பின்னணியில்தான் இந்த பிரச்னை தீவிரமாக்கப்படுகிறது. அதன் பின்னால் தமிழகத்தை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் உள்ளனர் ” என்றார்

வழக்கறிஞர் போராட்டம்  தொடர்பாக  இளம் வழக்கறிஞர், எஸ். கனிமொழி, " இந்த போராட்டம் மிக அவசியமானது, மற்ற நீதிமன்றங்களைத் தவிர்த்து இங்கு  உயர்நீதிமன்றத்தில்  உள்ள  வழக்கறிஞர்கள் மட்டும் பெரும்பாலானோர் நீதிமன்றம் செல்கின்றனர். சில மூத்த வழக்கறிஞர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போலவும்,  வழக்கறிஞர்கள் இடையே நல்லவர்களாக காட்டிக் கொள்ளவும், நீதிமன்றத்திற்கு வராமல்  ஜூனியர் வழக்கறிஞர்களை அனுப்பி வழக்குகளை நடத்தி, அனைத்து தரப்பினரிடமும்  நல்ல பெயர் வாங்குகின்றனர்.

இவர்களுக்கு அச்சம் மட்டுமின்றி, தனிப்பட்ட சில காரணங்களுக்காகவும், போராட்டத்தில் கலந்து கொண்டால், பிறகு, அவர்கள்  நீதிபதிகளாக ஆவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தயக்கம். ஆனால் கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஆக வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் அச்சம் இல்லாமல் போராடுகிறார்கள்"  என்று நிஜ நிலவரத்தை தெளிவாக சொன்னார்.

- அ. பா. சரவண குமார்
- படங்கள்: சி. சதிஸ் குமார்

(மாணவ பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ