Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆயிரம் கைதிகளை விடுவிப்பாரா முதல்வர்?' -சிறைக் கைதிகளின் செப்டம்பர் 15 நம்பிக்கை

கைதிகள் முன்விடுதலை தொடர்பாக, சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ' எட்டு ஆண்டுகளாக பரிதவித்து வந்த கைதிகளுக்கு ஒரு விடியலாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் அண்ணா பிறந்தநாளில் ஆயிரம் கைதிகள் வரையில் விடுதலையாகும் வாய்ப்புகள் உள்ளன' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

தமிழகத்தில் புழல், கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட ஒன்பது இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. தவிர, பெண் கைதிகளுக்கென சென்னை (புழல்), வேலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தனிச் சிறைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மத்திய சிறைகளிலும் மொத்தம் 22 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1,405 கைதிகளை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய உத்தரவிட்டார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. ' இவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது தவறு' என எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார் சுப்ரமணியன் சுவாமி. இதனால் கடந்த எட்டு ஆண்டுகளாக கைதிகள் முன்விடுதலை தொடர்பாக மாநில அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினார் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி. இதற்கு பதில் அளித்த சிறைத்துறை அமைச்சர், ' சுப்ரமணியன் சுவாமி வழக்கு நிலுவையில் இருப்பதால் முன் விடுதலை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது' என்றார். ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தன. இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ' 2008-ம் ஆண்டு முன்விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அனைவரையும் வழக்கில் சேர்த்து விசாரணை நடத்துவது என்பது சாத்தியமற்றது. தவிர, முன்விடுதலையான கைதிகள் அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சட்டரீதியாக ஏற்புடையதாக இருக்காது. இதுகுறித்த அரசாரணையில் எங்களால் தலையிட முடியாது' எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார் தலைமை நீதிபதி.

"சிறைக் கைதிகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு இது. இத்தனை ஆண்டுகளாக சுவாமியின் வழக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. வருகிற செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் நீண்டகாலமாக சிறையில் வாடும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்" என  உற்சாகத்தோடு பேசினார் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி. தொடர்ந்து நம்மிடம், " தமிழக சிறைகளில் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் கைதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பத்தாண்டுகளைக் கடந்தும் முன்விடுதலை செய்யப்படாதவர்கள் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டன. வீரப்பனின் அண்ணன் மாதையன் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் 27 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நாற்பது கைதிகள், 19 ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். கர்நாடக அரசு பத்தாண்டுகளைக் கடந்த 250 கைதிகளை முன்விடுதலை செய்துள்ளது. அதேபோல், தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேல் இருப்பவர்களை மாநில அரசு முன்விடுதலை செய்ய வேண்டும். ' வருகிற அண்ணா பிறந்தநாளில் முன்விடுதலை செய்யப்படுவோம்' என்ற நம்பிக்கை கைதிகள் மனதில் எழுந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினரும் அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர்" என்றார் விரிவாக.

எட்டு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் தமிழக சிறைச்சாலைகளின் கதவுகள், செப்டம்பர் 15 அன்று திறக்குமா?

-ஆ.விஜயானந்த்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ