Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு..! பின்னணி விவரங்கள்

ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற புதிய மாவட்ட செயலாளர்கள்.

பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசு கொறடாவும் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த மனோகரன் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் பதவியும் மாற்றியுள்ளார் ஜெயலலிதா.

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சண்முகநாதன். தற்போது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பால்வளத்துறை மீதான விவாரத்தில் சண்முகநாதன் பங்கேற்று பேசினார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சண்முகநாதன் நீக்கப்பட்டுள்ளார். இவரது கட்சிப் பதவி பறிப்புக்கு சசிகலா புஷ்பாவுடன் இருந்த தொடர்புகள்தான் என்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இதேபோல், திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக இருந்த மனோகரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மனோகரன் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் வெல்லமண்டி நடராஜன் வெற்றி பெற்றார். இதனால், நடராஜனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. ஏற்கனவே மாநகர மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்துவந்த மனோகரன், அதே பதவியில் தொடர்ந்தார். வெல்லமண்டி நடராஜனை அரசியலில் வளர்த்துவிட்டவர் மனோகரன். அந்த வகையில், நடராஜனை தனது ரப்பர் ஸ்டாம்ப் ஆக வைத்திருக்க நினைத்திருக்கிறார் மனோகரன். அது நடக்கவில்லை. இதனால் இருவருக்கும் பனிப்போர் நடந்திருக்கிறது. இந்த விவகாரம், கட்சியின் தலைமைக்கு புகார் சென்றதாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பி.வி.ரமணா இருந்தார். ஆபாச வாட்ஸ்அப் விவகாரத்தில் சிக்கியதால் அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி பறிக்கப்பட்டது. இதன் பிறகு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வாலாஜாபாத் கணேசன் கவனித்து வந்தார். மீண்டும் ரமணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்து வந்த நிலையில், கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சிறுனியம் பலராமன் எம்.எல்.ஏ-வை  மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. இதற்காக, கிழக்கு மாவட்டத்தில் இருந்த பொன்னேரி தொகுதி மேற்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஓபிஎஸ் ஆதரவாளரான அலெக்சாண்டர் எம்எல்ஏ-வை ஜெயலலிதா நியமித்துள்ளார். இது ரமணா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சசிகலா புஷ்பா ’புயலில்’ சாய்ந்த தலைகள்!

நெல்லை அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடர்கிறது. அதே நேரம், சசிகலா புஷ்பா சார்ந்த சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் கட்சித் தலைமை மேற்கொண்டு வருகிறது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் பி.ஹெச்.பாண்டியனின் குடும்பமே கோலோச்சியது. அமைப்புச் செயலாளராக அவர் இருந்த நிலையில் அவரது மகன் மனோஜ் பாண்டியனுக்கு மாநில வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அரவிந்த் பாண்டியனுக்கு அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மனோஜ் பாண்டியன் தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக உள்ளார். பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனுக்கு எம்.பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த அளவுக்கு செல்வாக்கோடு இருந்த அந்த குடும்பத்தை ஜெயலலிதா தற்போது ஓரங்கட்டி வைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் சார்ந்த நாடார் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரான நாராயண பெருமாளை அமைப்புச் செயலாளராக்கினார். அத்துடன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது யாருக்குமே அறிமுகம் இல்லாதவராக இருந்த கே.ஆர்.பி.பிரபாகரனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுத்து எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பினார். தற்போது, சசிகலா புஷ்பா விவகாரம் பூதாகரமாக வெடித்து தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களிடம் அ.தி.மு.க மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில நாடார் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதனால் அந்த சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் அ.தி.மு.க இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக எம்.பி.யாக உள்ள கே.ஆர்.பி.பிரபாகரனுக்கு நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளராக ஆவாரைகுளத்தை சேர்ந்த பால்துரைக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் நபர்கள், கட்சித் தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சசிகலா புஷ்பாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அவரது வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள் மற்றும் தற்போதும் தொடர்பில் இருப்பவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதால் அச்சத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே மூன்று கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க-வில் எப்போதும் எதுவும் நடக்கலாம்!

- எஸ்.மகேஷ், ஆனந்தகுமார், ஆண்டனிராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ