Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' 2,500 கோடி ரூபாய்க்கு பதில் சொல்வாரா அமைச்சர்?' -சுகாதாரத்துறையைச் சுற்றும் சர்ச்சை

தமிழக சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை நாளை நடைபெற இருக்கிறது. ' தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டுப் பணத்தில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. இந்தப் பணத்தில் 25 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கலாம்' எனக் கொந்தளிக்கிறது டாக்டர்கள் சங்கம்.

சட்டமன்றத்தில் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் களைகட்டி வருகின்றன. சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை குறித்து, நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், " அரசு மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளைப் பிரிக்கும் கருவிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இயந்திரத்தின் விலையே இருபது லட்சத்தைத் தாண்டும். இந்த இயந்திரங்களைக் கையாள்வதற்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளிக்காததால், இவற்றை பயன்படுத்தவே முடியவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் மருத்துவமனைகளில் முடங்கிக் கிடக்கிறது. முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு, இயந்திரங்களை வாங்காததற்கு யார் காரணம்? இவற்றின் பின்னால் உள்ள அரசியல் என்ன?

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ரேடியோ தெரபி இயந்திரமே இல்லை. 'மத்திய அரசு நிதி அளிக்கவில்லை' என்கிறார்கள். ஆனால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளை நம்பி நாள்தோறும் லட்சக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இவர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கருவிகளில் பழுது ஏற்பட்டால், அவற்றைச் சரி செய்ய போதுமான ஊழியர்கள் இல்லை. இப்படி பழுது ஏற்பட்டுள்ள இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. காப்பீட்டுத்துறையில் இருந்து மருத்துவமனைகளுக்குத் தற்காலிக பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். இவர்கள் கொடுக்கும் மூன்றாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்வதற்குப் போதுமான ஆட்கள் வருவதில்லை.

தற்போது வரையில் 70 சதவீத பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிகின்றனர். தவிர, கடந்த நான்கு ஆண்டுகளாக 1,100 மருத்துவர்கள் தற்காலிகமாகப் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவ ஆணையத்தின் மூலமாக தேர்வு நடத்தி, இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதைவிடக் கொடுமை, அரசு காப்பீட்டுத் திட்டத்தில் நடக்கும் ஊழல்கள்தான்" எனக் கொந்தளித்தவர், " அரசின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. காப்பீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படுவதில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் காப்பீட்டுத் திட்டத்திற்காக மூன்றாயிரத்து 500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கின்றது. இதில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் 2,500 கோடி ரூபாய் சென்றிருக்கிறது. இந்தப் பணத்தில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுடன் சுகாதாரத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மறைமுக உடன்பாடு வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் காப்பீட்டுப் பணத்தில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு 25 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்திருந்தால், ஏழை எளிய மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை செய்திருக்க முடியும். ஒரு மருத்துவக் கல்லூரியைத் திறக்க 100 கோடி ரூபாயே போதுமானது.

இனி வரும் காலங்களில் காப்பீட்டுத் திட்டத்தின் நிதியைக் குறைத்து, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், மருத்துவர்கள் இடமாற்றத்தில் நடக்கும் கட்டாய வசூலை தடுத்து நிறுத்த முதல்வர்  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் ஒரு மருத்துவருக்கு இடமாற்றல் உத்தரவே வருகிறது. நேர்மை, வெளிப்படைத்தன்மையோடு சுகாதாரத்துறை இயங்கவில்லை. கருணை அடிப்படையில் இடமாறுதல் கேட்பவர்களிடம் கருணையற்ற வசூலில் ஈடுபட்டால், அவர்களால் ஆரோக்கியமான மனநிலையோடு பணியாற்ற முடியுமா?" என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பினார் டாக்டர்.ரவீந்திரநாத்.

" மாநிலம் முழுவதும் ஏழு இடங்களில் மண்டல உடற்கூறு ஆய்வகங்களைத் திறந்து வைத்தார் முதல்வர். அந்த ஆய்வகங்களின் பரிதாப நிலையைப் பற்றி விளக்க வேண்டியதில்லை. நெல்லை மற்றும் கோவையில் எட்டு கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரகக் கல் உடைக்கும் மையங்கள்(லித்தோ டிரிப்ஸி) திறந்து வைக்கப்பட்டன. இதன்மூலம் ஒரு நோயாளிக்குக்கூட சிகிச்சை அளிக்கப்படவில்லை. அந்த மையங்களுக்குப் பூட்டு போட்டுவிட்டார்கள். தற்போது வரையில் 600-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படாமலேயே உள்ளன. இவற்றைப் பற்றி துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசவே முடியாத சூழல்தான் உள்ளது. சுகாதாரத்துறைக்குத்தான் தற்போது நல்ல சிகிச்சை தேவைப்படுகிறது" என வேதனையோடு பேசினார் அரசு மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஒருவர்.

மருத்துவக் காப்பீடு குளறுபடி, பணிநிரந்தரம் உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு நாளை மானியக் கோரிக்கையில் விடை காணப்படுமா என ஆவலோடு காத்திருக்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்