Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வயதை குறைத்தால் இதுதான் நிகழும்..! ராமதாஸின் காரணங்கள்

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குடிமைப்பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைத்தால் தேர்வு எழுதுபவர்கள் அதிகமான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குடிமைப்பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்க  வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. இது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் தீய செயலுக்கு ஒப்பானது ஆகும்.

இந்திய குடிமைப்பணி இந்த தேர்வு முறையில் சீர்திருத்தங்களைச் செய்வது குறித்து பரிந்துரை செய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் முன்னாள் செயலாளரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான பி.எஸ். பாஸ்வான் தலைமையில் உயர்மட்டக் குழுமை மத்திய பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது. ஓராண்டு ஆய்வுக்குப் பின் அக்குழு கடந்த வாரம் அதன் அறிக்கையை தேர்வாணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணித் தேர்வுக்கான வயது வரம்பை குறைப்பது எந்த வகையிலும் நியாயமான செயலாக இருக்காது. தற்போது பொதுப்பிரிவினர் 32 வயது வரை இத்தேர்வில் பங்கேற்கலாம். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயது வரையிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்கள் 37 வயது வரையிலும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதலாம். இதுபோதுமானதல்ல என்பதால் அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகவும், மற்றவர்களுக்கு 40 வயதாகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நியாயமான கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக, அதற்கு முற்றிலும் எதிரான பரிந்துரையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பரிசீலித்து வருவது முறையல்ல. இது கிராமப்புற, ஏழை மாணவர்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.

குடிமைப்பணித் தேர்வை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 முறையும், எழுதலாம். மற்றவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம். கடந்த காலங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனடியாக இத்தேர்வுகளில் பங்கேற்றனர். ஆனால், இப்போது பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு, மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் தங்களின் படிப்பை முடித்த பிறகு தான் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்கும்போது குறைந்தபட்சம் 25 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். அதன்பின் அவர்கள் ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதினாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. உதாரணமாக பொதுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 26 வயதில் முதல் முறையாக இந்திய குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதாக வைத்துக் கொண்டால் 32 வயதுக்குள் 5 முறை மட்டுமே பங்கேற்க முடியும்; அதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் அதிகபட்சமாக 8 முறை மட்டுமே தேர்வெழுத முடியும். ஒருவேளை அவர்கள் கடைசி வாய்ப்பில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு இருந்தால் அதை அதிகபட்ச வயது வரம்பு தடுக்கிறது. ஒருவகையில் கிடைக்கும் வாய்ப்பை, இன்னொரு வகையில் தட்டிப் பறிப்பது இயற்கை நீதிக்கு எதிரான செயலாகவே அமையும்.

அதிகபட்ச வயது  32-ஆக இருக்கும் போதே, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில், வயது வரம்பு குறைக்கப்பட்டால் இன்னும் அதிகமான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு தான் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நிலைக்கு வருகின்றனர். குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களின் சராசரி வயது 2005 ஆம் ஆண்டில் 27.5 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 28.6 ஆகவும் உள்ளது. அப்படியானால் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் 32 வயது அல்லது அதற்கும் அதிக வயதுடையவர்களாக இருப்பார்கள். இத்தகைய சூழலில் அதிகபட்ச வயது ஓராண்டு குறைக்கப்பட்டாலும் 15-20 விழுக்காட்டினர் குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடும். சமூகநீதிக்கு இதைவிட மோசமான கொடுமையை இழைக்க முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்படுவதை எப்பாடுபட்டாவது தடுக்கவேண்டும்.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் 2009வது ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயதை 30-லிருந்து 26 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு   ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்வாக சீர்திருத்த ஆணையப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டு, அதிகபட்ச வயது 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. இப்போதும் பாஸ்வான் குழு பரிந்துரைப்படி அதிகபட்ச வயதை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, பாஸ்வான் குழு பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயதை இப்போதுள்ள 32 வயதிலிருந்து 35 வயதாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ