Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்டாலின் சபையில் இருப்பதை முதல்வர் விரும்பவில்லை!' -சர்ச்சையில் சட்டமன்றக் காட்சிகள்

ட்டப் பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர் தனபால். ' இந்த உத்தரவு சபையின் மாண்பினை சீரழிக்கும் செயல்' எனக் கொதிக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலினின், 'நமக்கு நாமே பயணம்' குறித்து அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்தார். இதனால் கொந்தளித்த தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 'அவைக் குறிப்பில் இருந்து உறுப்பினரின் பேச்சை நீக்க வேண்டும் ' என ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்றுக் கொள்ளாத சபாநாயகர், ' அவை நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறீர்கள்' என கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதைக் கண்டுகொள்ளாமல் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இந்த உத்தரவை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை, அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு பேரவைக்கு வெளியே வந்தனர்.

பேரவைத் தலைவரின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " சட்டப் பேரவையில் வாதம் நடக்கும்போது அதற்கு பதில் சொல்லவோ மறுக்கவோ செய்யலாம். ஆனால், ஒரே நேரத்தில் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தற்போது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தி.மு.க உறுப்பினர்களை பங்கேற்கவிடாமல் செய்வது ஜனநாயக விரோதமானது.

நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற நேரங்களில் அவை நடவடிக்கையை ஒத்தி வைக்கும் வேலையில் சபாநாயகர் ஈடுபடுகிறார். ஒருநாளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவலை நாம் கேள்விப்பட்டதில்லை. தி.மு.க ஆட்சிக் காலத்திலும் ஜனநாயகப்பூர்வமாக சபை நடத்தப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியிலும் நடத்தப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது. இது தவறு என்றே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்" என்றார் நிதானமாக.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, " பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அதன் தலைவர்களையும் விமர்சிக்கும்போது அவைக்குறிப்பில் பதிவு செய்கிறார் சபாநாயகர். அதேநேரத்தில், அ.தி.மு.க உறுப்பினர்களின் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதில் அளித்தாலோ, எதிர்த்தாலோ அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் செய்கிறார். இது சபாநாயகரின் ஒருதலைபட்சத்தையே காட்டுகிறது.  இன்று சபையில் இருந்து சட்டமன்றக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக வெளியேற்றி உள்ளனர்.  மேலும் தி.மு.க உறுப்பினர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

சட்டமன்றப் பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் சீரழிக்கும் செயலாகவே இதனைப் பார்க்கிறோம். பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் 88 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்திருப்பதன் நோக்கமே, முதல்வரின் துறையான காவல்துறை உள்ளிட்ட முக்கிய மானியக் கோரிக்கைகளின்போது சட்டமன்ற நடவடிக்கைகளில் அவர்களைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகத்தான்.

குறிப்பாக, காவல்துறை மானியக் கோரிக்கையின்போது ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் இருப்பதை ஆளுங்கட்சியினர் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை ஒரு ஜனநாயகப் படுகொலையாகவே கருதுகிறோம். இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அவை நடவடிக்கைகளில் தி.மு.க உறுப்பினர்கள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ