Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! - வைகோ

சென்னை: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிச் சென்றதும், தொடர்ந்த விவாதத்தின்போது, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் உரையின்போது, "நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.

அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாக குரல் கொடுத்ததால், அவர்களை அவையைவிட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேனகா காந்திக்கு அடிப்படை புரிதல் எதுவும் தெரியாது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதுதான் சரியான கருத்து.

ஜல்லிக்கட்டு காளைகளை யாரும் துன்புறுத்துவது கிடையாது. அதை குழந்தைகள்போல் பாதுகாக்கின்றனர். அந்த மாடுகளுக்கு சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படும். மாடுகளுக்கு எந்தவித சிறு காயமும் ஏற்படாது. இதை மேனகா காந்தி புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், தி.மு.க. ஆட்சியின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சியின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றி வருகின்றனர். அ.தி.மு.க,. தி.மு.க. ஆட்சி காலத்தில் மாறி, மாறி இப்படி செய்கின்றனர். இது சட்டசபைக்கு கவுரவம் அளிக்காது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஜனநாயக கடமை ஆற்ற சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ