Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உண்மையை வெளியே கொண்டு வருவது தவறா? - கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்

2002 -ம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில்  நடந்த படுகொலைகள், போலி என்கவுன்ட்டர்கள் குறித்து உயிரையும் துச்சமாக மதித்து, உண்மையையும்  நீதியையும் வெளியே கொண்டு வர,  புலனாய்வு பணியை  மேற்கொண்டவர்தான் பத்திரிகையாளர் 'ரானா அயூப்'.

இவர்,  தெஹல்கா இதழில் பணியாற்றிய காலத்தில், 2002 -ல்  இஸ்லாமியர்களுக்கு  எதிராக  குஜராத்தில் நடந்த  படுகொலைகள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார்.

அந்த நூல்தான் "Gujarat Files: Anatomy of a Cover Up ". குஜராத் மாநிலத்தில் அப்போது உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரை பேட்டி எடுத்து , ரகசியமாக ஒலிப்பதிவு செய்து, அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலை, தற்போது ச. வீரமணி  தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சென்னையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம். பி .டி.கே ரங்கராஜ் இந்நூலை வெளியிட, காயிதே மில்லத் அறக்கட்டளையின் தாவுத் மியாகான்  பெற்றுக் கொண்டார்.

உண்மை மற்றும் நீதிக்கான தேடல்தான் இந்த புத்தகம்:

இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்று  ஏற்புரையாற்றிய ரானா அயூப், " இந்த புத்தகத்தை யாருமே பதிப்பிக்க முன்வரவில்லை. இரண்டு வருடமாக  போராடி பல்வேறு போராட்டங்கள் ,தடைகளுக்கு இடையே இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளேன் .ஜனநாயகத்தின் மீது சிறிது  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதில்  இருக்கும் உண்மைகளைக் கண்டு மேலும் குரல்கள் ஒலிக்க வேண்டும் . இது மற்ற புத்தகங்களைப்  போன்றதல்ல. நீதிக்கான  தேடலாக  உள்ளது.


நாம் அனைவரும் நீதியை  மறந்து விட்டோம்:

டெல்லியில்  புத்தக வெளியீட்டு விழாவிற்கு 400  பேர் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்  என பல்வேறு  தரப்பினரும் வந்திருந்தனர். அப்போது  நான் நினைத்தேன்,  அடுத்த நாள் அனைத்து நாளேடுகளிலும் இதைப் பற்றிய  பேச்சாகத்தான்  இருக்கும்,  நாட்டு மக்களும் இந்த புத்தகத்தைப்பற்றித்தான் பேசுவார்கள்  என்று. ஆனால் எந்த நாளேடுகளிலும் இதைப்பற்றி  ஒரு பத்தி செய்தி கூட வரவில்லை. மிகுந்த வேதனையாக இருந்தது. எந்த நாட்டில் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன். சிலர்,  'நான்  ஒரு முஸ்லிம் என்பதால்தான் இதை எழுதுகிறேன்' என்று கூறுகிறார்கள். ஒரு விஷயத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள். நீதி  என்ற  வார்த்தையை  மறந்து விட்டார்கள்

5 வருடம்  நரக வாழ்கை அனுபவித்தேன்:

நாட்டில் உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பு கொடுக்கும் சிலர் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் . குஜராத்தில் நடந்த படுகொலைகள் குறித்து நான் எழுதிய  இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போர்ட் அடிப்படையிலேயே அமித் ஷா கைது செய்யப்பட்டார். பொதுக்கூட்டங்களில் அமித்ஷா குறித்து நான்  மட்டும் விமர்சித்து பேசவில்லை, உச்ச நீதிமன்றமே  அவரை விமர்சித்துள்ளது.  உச்ச நீதிமன்றம்  பேசிய வார்த்தைகளைத்தான்  நான் பேசி வருகிறேன் . இந்த புத்தகத்தில்  undercover  journalism- த்தை பற்றி எழுதியுள்ளேன். என்னுடைய  உண்மை அனுபவங்களை எழுதியுள்ளேன். ஆனால் என்னைப் போன்று யாரும் undercover  journalism- த்தை மேற்கொள்ளாதீர்கள் என்று கூறுகிறேன். அதை நான் யாருக்கும் பரிந்துரைக்கவும்  மாட்டேன். அவை அனைத்தும் வலிகள் நிறைந்த காலங்கள். 5 வருடம் நரக  வாழ்கை  அனுபவித்தேன்.  எனக்கு  என்ன நோய் உள்ளது என்பது கூட தெரியாமல் போன  காலங்கள்  உண்டு. பிறகு 3  வருடம் உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தூக்க மாத்திரைகள்  எடுத்துக் கொள்ளாமல் என் இரவுகள் கழிந்ததில்லை


மனசாட்சியை அடகு வைத்து விட்டோமா ?:

நரேந்திர மோடி,  அமித்ஷா குறித்து உண்மைகளை  வெளியிட்ட பிறகும் நாட்டு மக்கள்  அவர்களை  இன்று  உயர் பதவியில்  உட்கார வைத்துள்ளனர். இந்த நாட்டின்  ஜனநாயக இயக்கத்தைக் காணும் போது மிகுந்த கவலை ஏற்படுகிறது .நாம் மனசாட்சியை அடகு  வைத்து விட்டு அனைத்தையும் செய்துள்ளோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,  இந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் நாளேடுகளில்  வருவதாக இருந்தது .  பிரசுரமாகும்  நாளுக்கு முன் தினம் என்னை தொடர்பு கொண்ட பத்திரிகை நிர்வாகத்தினர்,   இதனை  பிரசுரிக்க  முடியாது என்று கூறினார்கள். நான் என்ன  தவறு  செய்தேன் என்று  8 மணி நேரம் அழுதேன். பின்னர்  எனக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். உண்மைகளை  உரக்கச் சொல்லும் போது இதுபோன்று  இடர்பாடுகள் வரும் என்று  எண்ணினேன்.  இதனால் மிகுந்த  மன உளைச்சலுக்கு உள்ளாகி  உளவியல் நிபுணரை  அணுகினேன்


நீங்கள் நீதிக்கு  வலு சேர்க்க வேண்டும்:

நான் ஏன் நரேந்திர மோடி மீது இவ்வளவு அதிருப்தியில் உள்ளேன். 'இந்தியாவின் பல பகுதிகளில்  போலி என்கவுன்ட்டர் நடைபெற்று  வருகிறது. ஏன்  குஜராத்தில் மட்டும்  கவனம் செலுத்துகிறீர்கள்'  என்று கேட்கிறார்கள். எங்கே போலி என்கவுன்ட்டர் நடந்தாலும்,' ஜுகாரி தாக்குதல் நடைபெற இருந்தது. அதனால்தான் கொன்றேன்' என்கிறார். நடந்த  ஒவ்வொரு  என்கவுன்ட்டரின்  போதும்  பிணத்தை வைத்துக் கொண்டு செய்தியாளர்களை  சந்தித்து,  பேட்டி கொடுக்கிறார்.  நடந்த  கொடூர படுகொலைகளை  நியாயபடுத்துகிறார். இவைகளே  என்னை  கேள்வி கேட்க வைத்தது .     

போலி என்கவுன்ட்டரில் இஸ்ரத் ஜுகான் கொல்லப்பட்டார். அவர் தீவிரவாதி என்ற வாதம் வைக்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும் , சுராபுதின்  மனைவி வன்புணர்வு செய்து கொள்ளப்பட்டார். இதற்கு  என்ன  நியாயம் கற்பிக்கப் போகிறார்..

பெண் பத்திரிகையாளர் என்றோ அல்லது இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள்  என்றோ இந்தப் பணியை  நான் செய்யவில்லை. இந்தியாவை நேசிக்கிற  இந்நாட்டின் குடிமகள்  என்பதாலேயே  உண்மையை  வெளியே  கொண்டு வர  போராடி வருகிறேன். இதற்கான நீதியை  தேடித்தான் நான் ஒரு அடி எடுத்து வைத்துள்ளேன். அடுத்த அடியை நீங்கள்தான் எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆளும் அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்க வேண்டும். உண்மையை  தைரியமாக தட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான்  என்னைப் போன்ற குரல்களுக்கு வல்லமை கிடைக்கும். இந்தக் கைதட்டல்  எனக்காக  எழுப்பட்டவை அல்ல. என்னைப்  போன்று  போராடி வரும் அனைவருக்காகவும்  எழுப்பி  உள்ளீர்கள்" என்று பேசினார்.    

ரானா பேசி முடித்த போது  அரங்கமே அதிர்ந்தது. கைதட்டல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.  அவர் மேற்கொண்ட பணி,  வலிகளின் சுவடாகவே அனைவரது கைதட்டல் மூலம் கண்ணுக்குத் தெரிந்தது.

"உண்மை ஒரு போதும் உறங்காது; என்றாவது ஒரு நாள்  முட்டி மோதி நீதியை நிலை நாட்டும் என்பார்கள். ரானாவின் உண்மையை வெளிக்கொணரும் பணியும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்த பிரபஞ்சத்தை அதிரச் செய்யும்"  என்று அரங்கத்தில் இருந்தவர்கள் பேசியது அரங்க வாயில் தாண்டியும் ஒலித்தது.  

 - கே. புவனேஸ்வரி  | படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ