Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை! - முதல்வர் ஜெயலலிதா

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, 110-வது விதியின் கீழ்,  முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார்.

அப்போது, '' கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றப் போவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை மிகுந்த கவலைக்குள்ளாக்கி உள்ளது. கர்நாடகம் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, நம்முடைய சட்டமன்றத்தில் இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு மாறாக மேகதாது அணை கட்டும் பணிகளையோ அல்லது வேறு எந்த புதிய திட்டங்களையோ கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும்; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும்; மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு; வரும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் ஆணை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை, தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு,  அதன் 18.11.2014 நாளிட்ட கடிதத்தில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இடைக்கால மனுவில், உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மேகதாது திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்து உள்ளது.

8.3.2016 அன்று கர்நாடக அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மேகதாதுவில், அணைக் கட்டுவது பற்றிய எண்ணம் ஏதும் இல்லை என்று கர்நாடக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. இதையே உச்ச நீதிமன்றத்திற்கும் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும்.

நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்ய ரூ.64.30 கோடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். உழவுப் பணிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.500 வீதம் மானியம் வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும். தரமான விதைகள் வாங்க மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும். இயந்திர முறையில் நெல் விதைப்பு மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.600 வழங்கப்படும். இயந்திரம் மூலம் நடவு செய்தால் ஏக்கருக்கு ரூ.2,000 மானியம் வழங்குவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தமிழகம் சார்பில் புதிய வழக்கு தொடரப்படும், உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் இது தொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கு மூலம் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலத்திடம் இருந்து பெற முடியும். ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை இன்னும் கர்நாடகா வழங்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ