Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எதிர்க்கட்சியே இல்லாமல், எதற்கு சட்டசபை?' -குவியும் கண்டனங்கள்

ட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ' எதிர்க்கட்சிகளே இல்லாமல் காலி இருக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள்' எனக் கலாய்க்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ.

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தை, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சனம் செய்ததையடுத்து, சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து, ' ஒருவார காலம் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். இன்று சட்டசபைக்குள் நுழைந்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக'க் கூறி தர்ணாவில் ஈடுபட்டார். தி.மு.க மீதான நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பேரவையில் இருந்து வெளியே வந்த விஜயதரணி எம்.எல்.ஏ நம்மிடம் பேசும்போது, " தி.மு.க உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு கேட்டோம். அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டதால் வெளிநடப்பு செய்துவிட்டோம். அ.தி.மு.க உறுப்பினர்களைத் தவிர, எதிர்க்கட்சி வரிசையில் ஒருவர்கூட இல்லை. காலியான அந்த இருக்கைகளைப் பார்த்துத்தான் அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலன் குறித்து ஆளுங்கட்சிக்கு சிறிதும் அக்கறையில்லை. நடுநிலையாக அவையை நடத்த வேண்டிய சபாநாயகர், ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். இன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை நடந்தது. இந்தத் துறையில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் பேச முடியவில்லை.

திங்கள்கிழமை நடக்க இருக்கும் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்துள்ளனர். காவல்துறை மானியக் கோரிக்கை முடியும் வரையில் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதற்கு அரசு விரும்பாது என நினைக்கிறோம். எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டுதான் மானியக் கோரிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். அவை சுமூகமாக நடப்பதாக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை உருவாக்கும் வேலையில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது. நாளையும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோருவோம். மறுத்தால் வெளிநடப்பு செய்வோம்" என்றார் கொந்தளிப்போடு. 

சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, " கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்குச் சென்றது. தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ' இது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளது. தி.மு.க உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என்கிறார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனோ, " சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள், 'சபையில் கலந்து கொள்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு, 'சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெற முடியாது' எனக் கூறியிருக்கிறார் சபாநாயகர்.

சபாநாயகரின் இந்த பிடிவாதப்போக்கு ஏற்புடையதல்ல. இந்த வாரத்தில் மிக முக்கியமான மசோதாக்கள் நிறைவேற உள்ளன. அரசின் பிடிவாதப்போக்கு மக்கள் நலன் சார்ந்ததல்ல. ஜனநாயக மரபுக்கும் ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது'' என்கிறார்.

-ஆ.விஜயானந்த்





 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ