Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆக்கபூர்வமாக செயல்படுவதை அ.தி.மு.க விரும்பவில்லை!' -அறிவாலயத்தில் கொந்தளித்த ஸ்டாலின்

ட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ' நாம் சுமூகமாகச் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும், அ.தி.மு.க அதை விரும்பவில்லை' எனக் கொந்தளிக்கிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டமன்றம் தொடங்கிய நாள்முதலாக அ.தி.மு.கவினருக்கும் தி.மு.கவினருக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதங்கள் அனல் கிளப்பி வருகிறது. ' என்னைக் கேலி செய்கிறார்கள்' என சபாநாயகர் தனபால், தி.மு.க உறுப்பினர்களை நோக்கிக் குற்றம் சுமத்த, ' தி.மு.க உறுப்பினர்களின் செயலுக்காக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். மன்னிப்பு கேட்கவும் தயார்' எனப் பகிரங்கமாகப் பேசினார் மு.க.ஸ்டாலின்.

நேற்று சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. பேரவைக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், அ.தி.மு.க உறுப்பினர் ஒருவரின் பேச்சால், கொந்தளித்தனர் தி.மு.க எம்.எல்.ஏக்கள். இதையடுத்து, ' தி.மு.க உறுப்பினர்களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர். இதை எதிர்பார்க்காத தி.மு.க உறுப்பினர்கள், 'இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு' கோரிக்கை வைத்தனர். இதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.

 

இதன்பிறகு, நேற்று மாலை தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் அறிவாலயத்தில் கூடினர். அவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், " இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, நேற்று ஒரு சாதாரண பிரச்னைக்காக இடைநீக்கம் செய்துவிட்டனர். நேற்று காலையில் சபைக்குள் நுழைந்தபோதே, ' ஏதோ நடக்கப் போகிறது' என நினைத்தேன். 'அன்பழகன், ரங்கநாதன் போன்றோர் சைகை காட்டினார்கள்' எனப் பிரச்னை எழுப்பிய போதெல்லாம், அமைதியாக இருந்தார் சபாநாயகர். நேற்று திட்டமிட்டே நம்மை இடைநீக்கம் செய்துவிட்டனர். சட்டசபையில் ஜனநாயகபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், முன்பு தி.மு.க உறுப்பினர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துப் பேசினேன். அமைதியாக இருந்து மக்களுக்கான ஆக்கபூர்வ செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நாம் அமைதியாக இருப்பதை அ.தி.மு.க விரும்பவில்லை. யாரோ ஒரு உறுப்பினரை திட்டமிட்டே பேச வைத்து, நம்மை அவமானப்படுத்த நினைக்கிறார்கள். சபாநாயகரும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். ஜனநாயக ரீதியாகவே நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவோம்" எனக் கொந்தளித்திருக்கிறார்.

அறிவாலயக் கூட்டத்தை முடித்துவிட்டு, நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், " சட்டமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டுவது மட்டுமல்ல எங்களின் நோக்கம். பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டமன்றக் காட்சிகளை விளக்கவும் தயாராகி வருகிறோம். கடந்த ஆட்சியில் இதேபோல், சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தபோது, அ.தி.மு.கவினரின் செயல்பாடுகளைக் கண்டித்து, மின்ட் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதேபோல், வருகிற 22-ம் தேதி கலைஞர் முன்னிலையில் இதே இடத்தில் கூட்டம் நடத்த இருக்கிறோம். அன்றைக்குத்தான் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. ' மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கைப் பற்றி மக்களிடமே பட்டியல் போடுவோம்' என முடிவெடுத்திருக்கிறார் தலைவர். தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்களில் பொதுக் கூட்டங்கள் நடக்க இருக்கின்றன" என்றார்.

'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகிறது அறிவாலயம்.

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ