Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழங்குடியினருக்கு மறுக்கப்படும் வன உரிமை...!

 

காடுகளை நம்பி வாழ்பவர்கள் பழங்குடியினர். தமிழகத்தில் மட்டும் 19 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் இருளர், காட்டு நாயக்கர், மலைவேடன், முதுவன், புலயர் உள்ளிட்ட 36 வகையான பழங்குடியினர்களில் 4 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு வாழும் இடங்களை, பயன்படுத்தும் இடங்களை அவர்களுக்கே உரிமை அளிக்கும் வகையில், 'பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பர்ய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006' -ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. சுருக்கமாக, இது 'வன உரிமைச் சட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி 2005 டிசம்பா 13-ல் தேதிக்கு முன்பாகக் காடுகளில் வசிக்கும், விவசாயம் செய்துவரும் பழங்குடியினருக்கு அந்த நிலங்கள் பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர, பெரும்பாலான மாநிலங்களில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் இதை அமல்படுத்தினால் வனத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தத் தடையைக் கடந்த பிப்ரவரி மாதம் நீக்கிவிட்டது. எனினும், இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.

வன உரிமைச் சட்டம் குறித்து கோவையைச் சேர்ந்த வன ஆர்வலரும், எழுத்தாளருமான முருகவேளிடம் பேசினோம். "வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் இயற்கை வளங்களைச் சுரண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். பழங்குடியினர் இருக்கும் இடங்களில்தான் வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பழங்குடியினருக்குப் பல அநீதிகள் நடந்திருக்கின்றன. 'ரிசர்வ் ஃபாரஸ்ட்' என்ற பெயரில் அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். காய்ந்த சுள்ளிகளை வனத்துக்குள் செல்லும் பழங்குடியினர்களை வனத்துறையினர் விரட்டி அடிக்கின்றனர். காடுகளைவிட்டுப் பழங்குடியினர் வெளியேற்றம் என்பது, கடந்த 20 ஆண்டுகளாத்தான் அதிகம் நடந்துவருகிறது. கோவை மாவட்டம் பவானி சாகர் அணைக்குப் போகும் வழியில் தெங்குமரஹட்டா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவுக்கு காடுகள்தான் இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சில கிராமங்கள் இருந்தன. ஆனால், ரிசர்வ் ஃபாரஸ்ட் என்ற காரணங்களுக்காக 1980-க்குப் பிறகு அங்கிருந்த பழங்குடியினர் கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஒரு கிராமம்கூட அங்கு இல்லை. அதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதியில் இருந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர். கண்ணகி கோயில் அருகே குமுளி வனப்பகுதியில் முதுவர் என்ற பழங்குடியினர் கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் இப்போது இல்லை. பழங்குடியினர்களை அவ்வப்போது துரத்திவிட்டு மறு குடியமர்வு செய்கின்றனர். ஏராளமான பழங்குடியினர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பல இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தில் பழங்குடியினருக்காக ஏராளமான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

தமிழகத்தில் பழங்குடியினர்களுக்குப் பட்டா அளிப்பதற்காகக் கிராமசபைக் கூட்டங்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. பின்னர், இந்த மனுக்கள் மாவட்ட அளவில் ஆய்வு செய்யப்பட்டு, தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டது. பிறகு என்ன நடந்தது என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான டில்லி பாபுவிடம் கேட்டோம். "4 லட்சம் பழங்குடியினர் இருக்கும் இடங்களில் 23,400 மனுக்களை மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். பழங்குடியினருக்கு நிலப் பட்டா தரப்படுவதைப் பல மலைக் கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்களே ஏற்க மறுக்கிறார்கள். எனவே, முழுமையாக அனைத்துப் பழங்குடியினர்களிடம் இருந்தும் மனுக்கள் வாங்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டம் முள்ளிக்குறிச்சி மலைப்பகுதியில் பஞ்சாயத்திலும், மேலும் சில இடங்களிலும் மனுக்கள் வாங்கப்படவில்லை. பெறப்பட்ட மனுக்களில் 3,500 மனுக்கள்தான் தகுதியானவை என்று வனத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். அதில், 1,300 பேருக்கு பட்டா தயார்செய்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் பட்டா தரவில்லை. தேர்தல் முடிந்து சில மாதங்கள் ஆனபின்பும் பட்டா தரவில்லை. தயாராக இருக்கும் பட்டாக்களைத் தர வேண்டும். மேலும் மனுக்களை வாங்கி பட்டா தரவேண்டும்" என்றார்.

- கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ