Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் கொள்ளையில் ஈடுபட்டது நக்சலைட்டா? 25 சந்தேகங்களுடன் போலீஸார்!

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கொள்ளையில் ஈடுபட்டது நக்சலைட் அமைப்பா என்ற சந்தேகம் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதுதவிர, 25 சந்தேகங்கள் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

சேலத்திலிருந்து ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னை எழும்பூருக்குப் புறபட்ட சென்னை எக்ஸ்பிரஸில் 5.75 கோடி ரூபாய் கொள்ளைப்போனது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கொள்ளையர்கள் குறித்து முக்கியமான சில தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடவில்லை. கொள்ளை நடந்த இடம், கொள்ளையர்களின் உருவம் உள்ளிட்ட எந்தத் தகவலும் இல்லாமல் போலீஸாரின் விசாரணை நடந்துவருகிறது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில் கொள்ளை, சவாலான பணியாக எங்களுக்கு அமைந்துள்ளது. ரயிலின் மேற்கூரையைத் துளைத்துக் கொள்ளை நடந்தது இதுவே முதல் முறை என்பதால் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கொள்ளை நடந்த இடத்தை முதலில் கண்டறிந்தால் மட்டுமே, அங்கிருந்து விசாரணையைத் தொடங்கி கொள்ளையர்களைக் கைதுசெய்ய முடியும். இதனால் கொள்ளை நடந்த இடத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களுக்கு 25 சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரயிலில் பணம் சென்ற விவரம் தனியார் பார்சல் நிறுவனத்துக்கும், வங்கி அதிகாரிகளுக்கும், ரயில்வே பார்சல் அலுவலர்களுக்கும், பாதுகாப்புக்குச் சென்ற ஆயுதப்படை போலீஸாருக்கும் மட்டுமே தெரியும். இவர்கள் மூலம்தான் பணம் குறித்த தகவல் கொள்ளையர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அதற்காக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் வைக்கப்பட்ட மரப்பெட்டிகளைத் தயாரித்தவர்கள் மீதும் எங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விருத்தாசலத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்படுவதால் அந்த வழித்தடத்தில் கொள்ளை நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்போது மேற்கூரையில் துளையிட்டுக் கொள்ளையடிக்க முடியாது. இதனால் அந்த வழித்தடத்தைத் தவிர்த்து எங்களது விசாரணை நடத்தப்படுகிறது.

சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை டீசல் இன்ஜினில் ரயில் இயக்கப்படும் என்பதால், அந்த வழித்தடத்தில் கொள்ளை நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள், சந்தேகிக்கப்படும் இடங்களில் விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. சேலத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் மறுநாள் அதிகாலையிலேயே எழும்பூருக்கு வந்துள்ளது. ஆனால், கொள்ளை விவரம் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10.45 மணிக்கே தெரியவந்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரயில் வழித்தடத்தில் கொள்ளை நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ரயில் நிலையங்களில் உள்ள செல்போன் டவர்களின் சிக்னல் மற்றும் எஸ்.எம்.எஸ்-களை ஆராய்ந்தாலே கொள்ளையர்கள் குறித்த விவரம் தெரியலாம். மேலும், ரயில் நிலையங்களில் அருகில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் ஒரு மாதப் பட்டியலைச் சேகரித்து விசாரிக்கலாம். மேலும் ரயிலில் 226 பணப் பெட்டிகள் இருந்தபோதிலும் குறிப்பாகப் பெட்டி எண்கள் 16, 20-ஐ மட்டும் கொள்ளையர்கள் உடைக்கக் காரணம் என்ன?

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நக்சலைட் அல்லது வேறு ஏதாவது அமைப்புகள் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இதில் வட மாநிலக் குற்றவாளிகள் ஈடுபட்டு இருக்கலாம். கொள்ளைப்போன பணம், அழுக்கான நோட்டுகள் என்பதால் அதை நிச்சயம் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வங்கிகளில் மாற்ற வாய்ப்புகள் உள்ளன. எனவே, அனைத்து வங்கிகளையும் உஷார்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 சந்தேகங்கள் எங்களுக்கு ஏற்பட்டுள்ளன. அதுதொடர்பான கோணங்களில் எங்களது விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close