Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராய்லர் கோழி நல்லது !- அமைச்சரின் 'அதிர்ச்சி' அறிவுரை

சென்னை: பிராய்லர் கோழிகள் உடலுக்கு கெடுதி என பரவலாக சொல்லப்பட்டுவரும் நிலையில் சட்டமன்றத்தில் பிராய்லர் கோழியை உண்ணுவதில் கெடுதி இல்லை என அமைச்சரின் பதிலால் உறுப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

பிராய்லர் கோழி என்று சொல்லப்படும் கறிக்கோழி குறித்து இருவேறுபட்ட கருத்துகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்த ஆய்வுகளும்,விவாதங்களும் நடந்துவருகின்றன. மருத்துவ ரீதியாகவும், இது உடலுக்கு உகந்ததா இல்லையா என விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், இன்று சட்டசபையிலும் பிராய்லர் கோழி குறித்த விவாதம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

வேளாண் மற்றும் கால்நடைத் துறை மானியக் கோரிக்கை இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது, நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தமீமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக பிராய்லர் கோழிக்கறி உள்ளது. இங்கு இருக்கும் உறுப்பினர்கள் பலருக்கு அந்த  பிராய்லர் கோழிக்கறி விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த பிராய்லர் கோழிக்கறி குறித்து பல்வேறு கருத்துக்கள், சமூக வலைத்தளங்கள், மற்றும் பத்திரிகைகளில் வருகின்றன. இந்த கறி  உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்த அறிவியல் ரீதியான உண்மை பற்றியும், இது உடலுக்கு தீங்கானதா என்பதையும் அமைச்சர் விளக்க வேண்டும்” என்று பேசினார்.

உடனே அதற்கு பதில் அளித்த கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி “ பிராய்லர் கோழி சாப்பிடுவதால், எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. அதேநேரம் நாட்டுக்கோழியை அதிகரிக்க அதிக அளவில் நாட்டுக்கோழி பண்ணைகள் அம்மாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று பதில் அளித்தார்.

பிராய்லர் கோழி குறித்த ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில் அமைச்சரின் பதில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. 

- அ.சையது அபுதாஹிர்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ