Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரிநீர்ப் பிரச்னை: 5 மாவட்ட விவசாயிகள் போராட்டம்!

                              

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று விவசாய சங்கங்களின் சார்பில் சாலை மறியல், ரயில் மறியல், கடை அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் முதல் மே மாதம் வரை அந்தந்த மாதங்களுக்குரிய தண்ணீரை, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு, இதனை முறையாக பின்பற்றுவதில்லை. இது ஆண்டுதோறும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க முடியாத அவலநிலை உருவானது. 


இந்நிலையில்தான், கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்றாக மழை பொழிந்து, அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு, கண்டிப்பாக கர்நாடகாவிடமிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் என இங்குள்ள விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தார்கள். ஆனால் கர்நாடக அரசு வழக்கம் போல் கைவிரித்துவிட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

                                         


இந்நிலையில், காவிரிநீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நேற்று சாலை மறியல்,  ரயில் மறியல், கடை அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் துரைமாணிக்கம், முகமது அலி ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். 


கும்பகோணம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, சாலியமங்கலம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டார்கள். திருச்சி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், மயிலாடுதுறை, மணல்மேடு, செம்மனார்கோவில் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டங்களில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கு கொண்டார்கள். 


- கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: க. சதீஸ்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close