Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'13 வயதில் என் உறவினர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்!'- 53 வயதுப் பெண்ணின் புகார்

‘‘அது 1970ம் ஆண்டு. அப்போது நான் சிறுமி. எனது உறவினர் பெண்ணின் கணவரான லாவக்குமார், எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். என் பெற்றோரிடம் அது பற்றி சொன்னபோது, ‘அவர் பாசத்தினால் அப்படி நடந்துகொள்கிறார்’ என்றார்கள். சம்பவம் நடந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எனக்கு 53 வயது. இன்னும் என்னால் அந்த சிறுவயது பாதிப்பில் இருந்து மனதளவில் வெளிவர முடியவில்லை.

இந்நிலையில், 77 வயதாகும் லாவக்குமார், இன்றும் அந்தக் குற்றத்தை எங்கள் குடும்ப இளம் பெண்களிடம் தொடர்ந்து வருவதாக அறிந்தேன். ஒரு குற்றவாளிக்குக் கிடைக்கவேண்டிய தண்டனை இனியும் தாமதப்படக்கூடாது என்பதால், குழந்தைப் பருவத்தில் எனக்கு அவர் அளித்த பாலியல்தொல்லை குறித்து இப்போது காவல்துறையிடம் புகார் அளிக்கிறேன்!’’

பூர்ணிமா கோவிந்தராஜு என்ற பெண், சமீபத்தில் சென்னை காவல்துறையிடம் அளித்த புகாரின் சாராம்சம் இது. பூர்ணிமாவிடம் பேசினோம்.

‘‘1983 ம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா நாட்டுக்குச் சென்று அங்கேயே எங்கள் குடும்பம் செட்டிலாகிவிட்டது. இங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த நான், கனடாவில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றேன். பிரிட்டிஷ் கொலம்பியா சுற்றுச்சூழல் அமைச்சகத்தில், விஞ்ஞானியாகப் பணிபுரிந்து, விலங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

நான் அளித்திருக்கும் புகாரில் குறிப்பிட்டிருக்கும் சம்பவம், நாங்கள் கனடாவில் குடியேறுவதற்கு முன் நடந்தது. 1970 முதல் 1977வரை, லாவக்குமாரால் நான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அதை எனது பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் அதை நம்ப மறுத்தாலும், லாவக்குமாரின் மனைவி, ‘அவர் அப்படி செய்திருக்கக்கூடும்’ என்று சந்தேகித்தார். ஆனாலும், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி எதுவும் வைக்கப்படவில்லை. அந்த 13 வயதில், என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

பிறகு, சுமார் 20 வருடங்களுக்கு முன், எனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மீண்டும் என் குடும்பத்தினரிடம் பேசினேன். அப்போதும் என் தாயாரும், உறவினர்களும், ‘அப்படியெல்லாம் இல்லை, பாசத்தில் அவ்வாறு நடந்துகொண்டிருப்பார்’ என்றே அதையே மீண்டும் சொன்னார்கள். ஆனால், எங்கள் உறவினர்களின் பிள்ளைகள் சிலரிடமும் லாவக்குமார் இப்போதும் பாலியல் சீண்டல்கள் செய்துவருவது பற்றி அறிந்தபோது, இதற்கு மேலும் அமைதியாக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

சிலர் என்னிடம், ‘40 வருடங்களாக புகார் கொடுக்காமல், இப்போது ஏன் புகார் கொடுக்கிறாய்?’ என்கிறார்கள். இதே கேள்வியை நான் சமூகத்திடம் திருப்பிக் கேட்கிறேன். 40 வருடங்களாக, எனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு எதிராக வினைபுரியும் தைரியத்தையோ, சூழலையோ கொடுக்காதது சமூகத்தின் குற்றமே. இவ்வளவு ஏன், இந்த 21ம் நூற்றாண்டு பிள்ளைகளும், பெற்றோர்களும்கூட இதுபோன்ற ஒரு புகாரை பதிய இன்றுவரை முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்.

இப்போது நான் ஒரு விஞ்ஞானி. எனக்கு குற்றவாளியைப் பார்த்து அச்சமோ, சமூகம் என்ன சொல்லும் என்ற தயக்கமோ இல்லை. குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்ல, எனக்கு நேர்ந்த கொடுமையையே ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மூடிமறைக்கப்படாமல், புகார்களாகப் பதியப்படவும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெறவும் என் புகார் முன்னுதாரணமாக இருக்கும். இந்தியாவில் தினமும் பல பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள், அந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த துணிந்து முன்வர வேண்டும்.

மேலும், லாவக்குமாரால் இனி யாரும் பாதிக்கப்படக் கூடாது. அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பின்னர்தான் நான் கனடா செல்வேன். இனி, பூர்ணிமாக்கள் தயங்காமல் வெளிவர வேண்டும்’’ என்றார்.

பூர்ணிமா குற்றம்சாட்டும் லாவக்குமாரிடமும் தொலைபேசியில் பேசினோம். ‘‘பூர்ணிமா என் மருமகனின் தங்கை. என் மருமகனிடமும், அவரது தந்தையிடமும் நான் கடனாக பணம் வாங்கியிருந்தேன். தொழில் வீழ்ச்சி அடைந்ததால் என்னால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் என் மகளுக்கும், என் மருமகனுக்கும் தகராறு ஏற்பட்டது. மருமகன் என்னுடன் பேசுவதில்லை. இந்த குடும்பப் பிரச்னையில் என்னை பழிவாங்கத்தான் என் மீது இப்படியொரு அவதூறு புகார் அளித்துள்ளார் பூர்ணிமா.

எனக்கு இப்போது 77 வயதாகிறது. என் கடைசி காலத்தில் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

பூர்ணிமா தன்னைவிட வயதில் மிகவும் மூத்தவரை திருமணம் செய்தது, பின்னர் விவாகரத்தானது, கனடாவில் அவர் உளவியல் சிகிச்சை எடுத்துவருவது போன்ற விபரங்களை நான் காவல்துறையிடம் தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

- ம. சக்கர ராஜன் (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: பெ. கெசன்ட்ரா இவாஞ்சலின் (மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ