Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி புகாரில் பிரபல நடிகையின் பி.ஆர்.ஓ.!

சென்னையில் இன்ஜினீயரிங் சீட் வாங்கித் தருவதாக பதிமூன்றரை லட்சம்  மோசடி செய்த புகாரில் பிரபல நடிகை இனியாவின் பி.ஆர்.ஓ பாரதியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆந்திராவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வங்கி அதிகாரி. இவரது மனைவி ரத்னகுமாரி. இவர்களது மகள் மன்விகணபதில்லா. இவர் சென்னையில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் படிப்பில் சேர விரும்பினார். இதற்காக சென்னை தி.நகரை சேர்ந்த மோனிகா என்பவரை ரத்னகுமாரி சந்தித்து மகளின் இன்ஜினீயரிங் படிப்பு தொடர்பாக பேசினார். அதற்கு மோனிகா, சீட் வாங்கி கொடுக்க பதிமூன்றரை லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த ரத்னகுமாரி, பணத்தை வங்கி மூலம் அனுப்பியுள்ளார். உடனடியாக இன்ஜினீயரிங் கல்லூரி அட்மிஷனுக்கான இன்டிமேஷன் கடிதமும் ரத்னகுமாரிக்கு கொடுக்கப்பட்டது. இதை வாங்கி கொண்டு கல்லூரிக்கு சென்ற போது கடும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. தாங்கள் இதுபோன்ற கடிதம் யாருக்கும் கொடுக்கவில்லை என்று ரத்னகுமாரியிடம் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரத்னகுமாரி, மோனிகா மற்றும் பாரதியிடம் கேட்டபோது அவர்கள் இருவரும் மழுப்பலான பதிலை சொன்னார்கள். பிறகு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தனர். ஆனால் பணமும், இன்ஜினீயரிங் சீட்டும் கிடைக்காததால் கடந்த 5ஆம் தேதி ரத்னகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தி.நகர் துணை கமிஷனர் சரவணனுக்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாம்பலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாரதி, 'இன்டிமேசன்' கடிதத்தை போலியாக தயாரித்தது தெரியவந்தது. அதன்பேரில் அவரிடம் விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ரத்னகுமாரி, வங்கி மூலம் பாரதிக்கு 11 லட்சம் ரூபாயும், மோனிகாவுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் அனுப்பியுள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் பாரதியிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சென்னை தி.நகரை சேர்ந்த பாரதி, பிரபல நடிகை இனியாவின் பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார். மோனிகா, ஏற்கனவே பிரபல வர்த்தக நிறுவனத்தில் வங்கியில் லோன் வாங்கி தருவதாக சொல்லி மோசடி செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பாரதியிடம் விசாரணை நடத்தியதில் போலியாக கல்லூரியின் இன்டிமேசன் கடிதத்தை அவர் தயாரித்தது தெரியவந்துள்ளது. ரத்னகுமாரியிடம் வாங்கிய பணத்தில் பாரதி, தி.நகரில் பிரமாண்ட ஸ்பா (ஆண்களுக்கான அழகு நிலையம்) ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவரிடம் விசாரணை முடிந்தபிறகு கைது செய்வோம்" என்றார்.

இந்த புகார் குறித்து நடிகை இனியாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம், ''நீங்கள் கேட்டதற்குப் பிறகுதான் இப்படி ஒரு செய்தியே கேள்விப்படுகிறேன். எனக்கு பர்சனலாக எந்த பி.ஆர்.ஓ வும் இல்லை. எந்த படத்திற்கும் தனியாக மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ வைத்துக் கொண்டது இல்லை. பாரதி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இது முற்றிலும் வதந்தி. என்னுடைய அம்மாவின் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவுக்கு வந்து ஒருவாரம் ஆகிறது. அவரை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி வந்திருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. அம்மாவின் உடல்நலம் குறித்த மனஉளைச்சலில் இருக்கிறேன். இது போன்ற வதந்திகளை ஏன் இப்படி பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை" என்றார். 

எஸ்.மகேஷ் , வே.கிருஷ்ணவேணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ