Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசவையாக சட்டசபை, புலவர்களாக எம்.எல்.ஏக்கள்!- சங்கீதசபையான சட்டசபை!

ன்னர்கள் ஆட்சியில் தான் அரசவையில், மன்னரை புகழ்ந்து பாட புலவர்கள் இருப்பார்கள். மன்னரை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு பொற்கிழியை அள்ளி வழங்குவார் மன்னர். அது அன்றைய அரசவையின் மாண்பாக இருந்தது. வழக்கொழிந்துவிட்ட அந்த அரசவைக்கு சிறிதும் குறைவின்றி தமிழக சட்டசபையும் நடைபெறுகிறது என்பதுதான் வேதனை. மன்னரை புகழ்ந்தால்  பொற்கிழி கிடைக்கும் என்று மாய்ந்து, மாய்ந்து பாடினார்கள் புலவர்கள். இன்று முதல்வரை புகழ்ந்து பாடினால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையில் சட்டசபையை 'சபா' வாக ஆக்கிவிட்டார்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள். 

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதால் ஜெயலிலதாவின் பார்வை தன் மீது விழவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் கையாளும் வழக்கமான யுக்திகளில் ஒன்றுதான் இது. பாட்டுப் பாடி முதல்வரை மகிழ்விப்பது. சீரியசான பேச்சை விட, சிரிப்பான பேச்சையே அதிகம் முதல்வர் விரும்புவார் என்று அறிந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், குட்டி கதை சொல்வது. தி.மு.கவினருக்கு குட்டு வைப்பது, பாட்டு பாடுவது என்று நாள்தோறும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

அதிகமானவர்கள் பயன்படுத்தும் யுக்தி பாட்டுப் பாடி முதல்வரை குளிர்விப்பதுதான். மானிய கோரிக்கையின்போது கும்மிடிப்பூண்டி  எம்.எல்.ஏ விஜயகுமார்தான் பாடல் பாடும் படலத்தை துவக்கி வைத்தார். “திருச்செந்துாரின் கடலோரத்தில், செந்தில் நாதன் அரசாங்கம்” என்ற பாடலை ரிமேக் செய்து “இந்திய மண்ணில், செந்தமிழ் நாட்டில்,பைந்தமிழ்த்தாயின் அரசாங்கம், அது தேடி தேடி வருவோர்க்கெல்லாம், தினமும் தரும் தெய்வாம்சம்” என்று முழுபாடலையும் ரிமேக் செய்து, ஜெ.வை புகழ்ந்து பாட, சபை முழுவதும் சிரிப்பலை. அதை ரசித்தும் கேட்டார் முதல்வர்.

முழுநேர அரசியல்வாதியே இத்தனை அற்புதமாக பாட, திரைத்துறைக் கலைஞரான கருணாஷ் சும்மா விடுவாரா கிடைத்த வாய்ப்பை...திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வான இவர் அ.தி.மு.க வின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரும் அ.தி.மு.க வினருக்கு சளைக்காத வகையில் முதல்வரைப் பார்த்து “ நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என்ற எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடலை பாட அதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி தாளமும் அமைத்தனர். கருணாஸ் பாடப் பாட அதை பார்த்து பூரித்த ஜெ.வின் முகத்தில் புன்னகை மறைய சிறிது நேரம்பிடித்தது.

உறுப்பினர்களுக்கு சற்றும் சளைக்காதவர்களாக தான் அமைச்சர்களும் இருந்தனர். மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையினை தாக்கல் செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவையில் முதல்வர் இல்லாத நேரத்திலும் அவர் அமரும் இருக்கையை பார்த்து “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே” என்ற பாடலை பாடி சபையை கலகலப்பாக்கினார். அதற்கு மறுதினம் வேளாண் துறை மானியக்கோரிக்கை துவக்கி வைத்து பேசினார் அந்த துறையின் அமைச்சர் துரைகண்ணு. அவர் தனது உரையின் துவக்கதிலேயே “ விவசாயி..விவசாயி... கடவுள் எனும் விவசாயி கண்டு எடுத்த முதலாளி..விவசாயி”என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடி விவசாயிகளை புகழந்தே துவக்கினார்.

அதோடு தி.மு.கவினரை சாடும் வகையில் பேச்சின் இடையில் “ பொய்யும்..புரட்டும்” என்ற வரிகள் இடம்பெறும் எம்.ஜி.ஆர் பட பாடலை பாடினார். இறுதியில் ஜெயலலிதாவை குளிர்விக்கும் வகையில் “பூமி உள்ளவரை  எங்கள் அம்மா புகழே நிலைத்திருக்கும், புரட்சி தலைவர் பெயர் மக்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும்” என்ற பாடலை பாடி தனது மானியக் கோரிக்கை உரையை நிறைவு செய்தார்.

இப்போதெல்லாம் சபையில் முதல்வர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தாங்கள் பாடவேண்டிய பாடலை பாடிவிட்டு தான்  முடிக்கின்றனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள். பாட்டு பாட தங்களால் முடியாது என்று உணரும் உறுப்பினர்கள், குட்டிக் கதைகள் சொல்லியோ, அல்லது கவிதைகள் மூலமாகவோ ஸ்கோர் செய்ய பார்க்கின்றனர்.

மக்கள் பிரச்சணையை பற்றி பேசுவதில் இவர்கள் காட்டும் ஆர்வத்தை விட தங்கள் தலைவியை குஷிப் படுத்துவதற்குத்தான் சட்டமன்றத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டமன்றம் அரசவையாகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் புலவர்களாகவும் மாறிவிட்ட அவலத்தை என்னவென்று சொல்வது.

- அ.சையது அபுதாஹிர்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ