Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜிவ் ருசித்து சாப்பிட்ட தமிழக உணவு!- ஒரு புகைப்படக்காரரின் நெகிழ்ச்சி அனுபவம்

ந்தியாவின் பரபரப்பான தேர்தல் காலம் அது. வடமாநிலம் ஒன்றின் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக சென்றார் இந்த இளம் தலைவர். அன்றிரவு அவர் இருந்த அறையில் வித்தியாசமான ஓசை எழுந்தது. அந்த அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த அவரது உதவியாளர் மணிசங்கர் ஐயர். என்னவோ ஏதொ என பதறியபடி ஓடிச்சென்று அந்த தலைவர் இருந்த அறையின் அறைக்கதவை தட்டினார். கதவு திறந்தது. சிறிய டவலை இடுப்பில் சுற்றியபடி நின்றிருந்தார் இளம்தலைவர். ஏதேனும் பிரச்னையா எனக் கேட்டார் மணிசங்கர். ஒன்றுமில்லை...நாளை பொதுக்கூட்டத்திற்கான சிறப்பு ஆடை இல்லை. மாற்று ஆடை இல்லாததால் என் உடையை துவைத்துக்கொண்டிருக்கிறேன்' என்றார் அழகிய ஆங்கிலத்தில்.

நெகிழ்ந்துபோனர் மணிசங்கர்...எளிமையான அந்த மனிதரின் பாரம்பரிய சொத்தில் இந்தியாவில் வாழும் அத்தனைபேருக்கும் பல ஆண்டுகளுக்கு உணவளிக்க முடியும் எனச் சொல்லப்பட்டது உண்டு. அத்தனை பெரிய கோடீஸ்வரக் குடும்பத்தைச்சேர்ந்தவர்...அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி.
முகத்தில் ரோஜாவின் புன்னகை, பழக எளிமை, அதேசமயம் குன்றாத மன உறுதி. மாடமாளிகை, அறிய முடியாத அளவு சொத்துக்கள், இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திராவின் புதல்வர் என அத்தனை முகங்கள் இருந்தபோதும் படிக்கப்போன இடத்தில் பாக்கெட் மணிக்காக உணவு விடுதியில் பணியாற்றிய எளிமை மனிதர் ராஜிவ்காந்தி!

இந்திரா என்ற இந்தியாவின் அடையாளம் சில துப்பாக்கி தோட்டாக்களில் ரத்தம் தெரித்து சரிந்தபோது உலகமே வெடித்து அழுதது. அத்தனை துக்கத்திலும் பாட்டியின் மறைவுக்கு கலங்கிய தம் குழந்தைகளை தேற்றிய உறுதிமிக்க தகப்பன் அவர். தமிழகத்தை, தமிழர்களை நேசித்த இளம் தலைவர். தாயின் மறைவினால் விபத்து போல அவர் பிரதமராக நேரிட்டது. ஆனால் கால ஓட்டத்தில் வெளிப்பட்ட அவரது திறமையும் அதற்கான எதிர்வினைகளும் அவர் பிரதமரானது விபத்து அல்ல, விசேஷம் என்றானது பின்னாளில். அது இந்தியாவிற்கான நல்வாய்ப்பாகவும் பின்னாளில் மாறியது. அரசியல், வரலாறு, பண்பாடு என பழங்கதைகள் பேசிக்கொண்டிராமல் இந்தியாவை  தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்ச்சிபெற்ற வலிமையான நாடாக மாற்ற தொலைநோக்கு திட்டங்களுடன் இயங்கியவர் அவர்.  ஆகஸ்ட் 20. இன்று அவர் பிறந்ததினம்.

இந்தியாவின் கவர்ச்சிமிகு பலம்வாய்ந்த மனிதரான ராஜிவ்காந்தி எளிமையான மனிதர். டெல்லியில்  தான் சந்தித்த தமிழக புகைப்படக்காரர் ஒருவர் மதுரைக்கு எப்போது வருகிறீர்கள் எனக் கேட்க, அப்போதே அருகிலிருந்த தன் உதவியாளர் தவானை அழைத்து அப்பாயிண்மென்ட் ஃபிக்ஸ் செய்து அசரவைத்தவர்.

பத்திரிகைத்துறையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்  ராமகிருஷ்ணன். மதுரைக்காரர்.  பத்திரிகைப் பணியில் இருந்து ஓய்வுபெற்றபின் ஆன்மீகம் மற்றும் சேவை அமைப்புகளில் மக்கள் தொண்டாற்றிவருகிறார் இப்போது. தமிழகத்தின் அத்தனை பிரபலங்களுக்கும் நன்கு அறியப்பட்டவரான இவர் மறைந்த முன்னாள் பிரதமருடனான தன் அனுபவம் ஒன்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“எப்போதும் உதட்டில் புன்னகை, சுறுசுறுப்பு, எளிமை என அனைவரையும் கவர்ந்த ஒரு  தேசியத்  தலைவர்  ராஜீவ் காந்தி. பிரதமராக இருந்தபோதுநவீன இந்தியாவை உருவாக்க, பல திட்டங்களை செயல்படுத்தினார்.

உதாரணமாக, இன்று மக்கள் பயன்படுத்தும்,  நவீன எலக்ட்ரானிக் கருவிகளை,  அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். இன்னும் கொஞ்ச காலம் அவர் வாழ்ந்திருந்தால்,  இந்தியாவை, பல விதங்களில், முன்னேறிய நாடாக கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்நாளில் மறக்கவியலாது.

1990 மே மாதம் டில்லி பாராளுமன்றத்தில் உள்ள சென்ட்ரல் ஹாலில், சிறப்பு அனுமதி பெற்று அமர்ந்திருந்தேன். மதுரையின் அப்போதைய எம்.பி ஒருவரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த அன்பரசு எம்.பி., அன்று மாலை ராஜீவ் காந்திக்கு விருந்து வைக்கப்பட இருப்பதாகவும், பாராளுமன்ற  காங்கிரஸ் கட்சியின் செயலர் என்ற முறையில், தான் அதை நடத்துவதாகவும் கூறி பத்திரிகையாளர் என்ற முறையில் எனக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.  

விழா நடந்த ஆந்திர பவனுக்கு அன்று மாலை  மதுரை எம்.பி.ராம்பாபுவுடன்  சென்றேன்.  முகப்பில்  நின்று  அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தார் அன்பரசு. சிறிது நேரத்தில்,  மாருதி ஜிப்சியில், வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. சிரித்தபடி  வந்த  ராஜீவ் காந்தியுடன் கைகுலுக்கியும், மரியாதை வணக்கம் செலுத்தவும் எம்.பி க்கள், உள்ளிட்ட பிரபலங்கள் முண்டியடித்து கொண்டனர். போட்டோ ஃபிளாஷ்கள் மின்னின.. 

சம்பிரதாய பேச்சுகளுக்குப்பின் ராஜீவை ஷாமியான பந்தலுக்கு , அழைத்து சென்று, அங்கு தயார் நிலையில் வரிசையாக, உணவு வகைகளில், எது வேண்டும் என தேர்வு செய்யச்சொன்னார். அந்த வரிசையில் இந்தியாவின் அத்தனை பாரம்பரிய உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் ராஜீவ் தேர்வு செய்யப்போகும் உணவை  அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். ராஜீவ் யோசிக்காமல், அங்கிருந்த  தட்டு ஒன்றைத் தானே எடுத்துக்கொண்டு, நடந்தார். அவர் பார்வை நின்ற இடத்தில் தமிழ்நாட்டின் முறுவல் மசால் தோசை சுடச்சுட போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆர்வத்துடன் அதில் ஒன்றை லாவகமாக எடுத்து  தட்டில் வைத்துக்கொண்டார். தொடர்ந்து சட்னி, சிறிது சாம்பார் என யாருடைய உதவியுமின்றி எடுத்துக்கொண்டார். சற்று தள்ளி நின்று, தோசையை ருசித்து சாப்பிட்டார்.

அருகில் நின்றிருந்த  வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவுடன்  சிடுசிடுத்த முகத்துடன் ஏதோ  பேசிக் கொண்டிருந்தார். தோசை தீர்ந்ததும், அவர் அடுத்த உணவை தேர்வு செய்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து இன்னொரு தோசையை எடுத்து உண்ண ஆரம்பித்தார்.
விருந்து முடிந்ததும் அங்கிருந்த ஒவ்வொருவரும்  ராஜீவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள போட்டி போட்டு நின்றனர். அப்போது எனக்கு, எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ தெரியாது. ராஜீவிடம்,   சென்று,"ஒன் மினிட் சார் ... ப்ளீஸ் "  என்றேன். அவர் என்னை அருகில் அழைத்து  என்ன  என்று கேட்டார்.

“ஃபிரீலான்ஸ் பிரஸ் போட்டோகிராபர் பிரம்  மதுரை” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்ந்து, அரை குறை ஆங்கிலத்திலேயே , தேர்தல் வெற்றிக்கு பின்  தமிழ்நாட்டு மக்கள் உங்களை காண  மிகவும் ஆவலாக உள்ளனர். இந்தியாவிலேயே உங்களுக்கு அதிக ஆதரவு  தமிழ்நாடு தானே!, ஆகவே எப்போது வரப்போகிறீர்கள் "  என கேட்டேன்.

தட்டுத்தமாறி ஆங்கிலம் தமிழ் இந்தி என தத்துபித்து மொழியில் பிழையாக  பேசுவதை, உற்றுக்கேட்டவர் அதை தவறாக கருதாமல், கவனமாக காது கொடுத்து கேட்டார்... நான் கூறி முடித்தவுடன், பின்னால் திரும்பி,  " தவான்..."  என்று உரக்க அழைத்தார்.  சற்று தூரத்தில், யாருடனோ  பேசிக்கொண்டிருந்த அவரது செயலர் தவான்  வந்ததும்,  அவரிடம் என்னை காண்பித்து,  "இவர் கூறுவதை குறித்து கொள்ளுங்கள் "  என்றார்.

தவானிடம், 'ராஜீவ் மதுரை  டூர்  போக ஏற்பாடு செய்யுங்கள்'  என்று கூறினேன். உடனே ராம்பாபு எம்.பி யிடம் அவர், 'நாளை காலை உங்கள் லெட்டர் பேடில்  மதுரை நிகழ்ச்சி  கேட்டு எழுதி கொடுங்கள். ஏற்பாடு செய்யலாம்' என்றார். விருந்துக்கு பின் நடைபெற்ற அரசியல் கலந்த நையாண்டி  கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தபின்,  அனைவரிடமும்  கை குலுக்கி  விடைபெற்றுச் சென்றார் ராஜீவ்.

அதற்கடுத்த இரண்டு தினங்களில், டில்லியில் உள்ள  பாராளுமன்ற  அனெக்ஸ்  கட்டிடத்தில்,  அனைத்து மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதற்கும் சிறப்பு அனுமதி பெற்று  சென்றிருந்தேன். அதில் கலந்து கொள்ள வந்த ராஜீவ் காந்தியை வரவேற்க  வெள்ளை யூனிஃபார்மில்  போர்டிகோவில்  காத்திருந்தனர்  இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்.

நான் ராஜீவை புகைப்படம் எடுக்க தயாராக அவர்கள் பின்னால் காமிராவுடன்  நின்றிருந்தேன். அதே மாருதி ஜிப்ஸி  கார். ராஜீவே ஓட்டிவந்தார்.  பின் சீட்டில் ஒரு பாதுகாப்பு அதிகாரி.  தவிர பின்னால் ஒரு கார்...அவ்வளவுதான். ராஜீவ் போர்டிகோவில் கார் நிறுத்தாமல், சற்று தூரத்தில், இருக்கும் கார் பார்க்கிங்  இடத்திற்கே,  ஒட்டிச் சென்று  நிறுத்தி, அங்கிருந்து  நடந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்து வந்தது,இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது. 

வந்தவர் வழக்கமான பார்வையில் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தபடி கடந்தார். அப்போது கட்டம் போட்ட  கலர் சட்டையுடன், கேமிராவுடன் இருந்த,  என்னை பார்த்து, நானே எதிர்பாராதவிதமாக, "ஹல்லோ  போட்டோகிராபர் ஹவ் ஆர் யூ."  என்று  என் தோளை தட்டிவிட்டபடி, விரைவாக நடந்து சென்று சென்றார். அவருடன் செல்ல ஓடவேண்டியதாயிற்று...  நிகழ்ச்சி முடிந்து மாடியிலிருந்து   பரபரப்பாக இறங்கி கொண்டிருந்த   ராஜீவ் காந்தி அருகில்  விரைவாக சென்று,  "உங்களுடன் ஒருபடம் எடுத்துக்கொள்ள வேண்டும். " என் நான்  கேட்டவுடன் ,  சடாரென, என்னை பக்கத்திலே  நிற்க சொல்லி, அங்குள்ள டெல்லி போட்டோகிராபர்களிடம்,  படம் எடுக்க சொன்னார். ராஜீவ்.  

அதற்குள்  அங்கிருந்த காங்கிரஸ்  பிரமுகர்கள்  என்னையும் இடித்து  நின்று குரூப் போட்டோ மாதிரி ஆக்கி விட்டனர்..  இருப்பினும் நான் நடுவில்  நிற்பதால், ஒரு விஐபி  அந்தஸ்து எனக்கும் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. 

படம் எடுத்து முடிந்தவுடன், சிரித்துக்கொண்டே,  எல்லோரிடமும் விடைபெற்ற ராஜீவ், கார்  இருக்கும் இடத்திற்கு  நடந்து சென்ற வேகம் இருக்கிறதே...அசாத்தியம்! இன்றும் என் கண் முன் அந்த நடையும் அந்த பெரிய மனிதன் இந்த எளிய மனிதனின் வார்த்தைக்கு கொடுத்த மதிப்பும்  மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது” என்கிறார்.

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ