Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தர்ணா, போட்டி பேரவைக்கூட்டம்... மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது 2 வழக்குகள்!

சென்னை: தலைமை செயலகத்தில் தர்ணா மற்றும் போட்டிப் பேரவைக் கூட்டம் நடத்தியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிப்போனதும், விவாதங்கள் தொடர்ந்தன. அப்பொது, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, "நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார். அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாக குரல் கொடுக்க, அவர்களை அவையைவிட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 79 பேரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அறிவித்தார்.

இதை கண்டித்து கடந்த 18-ம் தேதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 19-ம் தேதி அன்று தலைமை செயலக வளாகத்தில் உள்ள மரத்தடியில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் சபாநாயகர் போல் அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில், 18-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பாலுவும், 19-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவை 4-வது நுழைவாயில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வியும் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டம், போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 

18-ம் தேதி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்றதாக மு.க.ஸ்டாலின் உள்பட 40 மீதும், 19-ம் தேதி அனுமதியின்றி போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் கூடியதாக மு.க.ஸ்டாலின் உள்பட 60 பேர் மீதும், அனுமதியின்றி கூடுவது (இந்திய தண்டனை சட்டம் 143) ஏதாவது ஒரு நோக்கத்துடன் செயல்படுவது (188) ஆகிய இரண்டு பிரிவுகளில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ