Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருது! - திரை உலகத்தினர் வாழ்த்து

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசனுக்கு, திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார். 1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில், ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நீயா?’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அவ்வை சண்முகி’, ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்கள் முக்கிய மைல் கல்லாக அமைந்தன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

57 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன், சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ போன்ற பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இதுதவிர, தேசிய விருதை 4 முறையும், 19 முறை ‘ஃபிலிம்பேர்’ விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஏற்கனவே, ‘செவாலியே’ விருதை நடிகர் சிவாஜிகணேசன் 1995-ம் ஆண்டு பெற்றார். இந்தியாவில் ‘செவாலியே’ விருதை இந்தி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோர் பெற்றிருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசனுக்கு, ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''பிரான்ஸ் அரசாங்கம் மிக உயர்ந்த விருதான செவாலியே விருதை மறைந்த சிவாஜிகணேசனுக்கு கொடுத்து கவுரவித்தது. அதேபோல், இன்று கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருதினை அறிவித்துள்ளது. இதை தமிழ் திரை உலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் கருதி மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

 

நடிகர் சிவாஜிகணேசனால் பலமுறை பாராட்டப்பட்ட கமல்ஹாசனுக்கு, அதே ‘செவாலியே’ விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை அளித்துள்ளது. ‘செவாலியே’ விருது பெற்ற சிவாஜிகணேசனுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்ததுபோல், கமல்ஹாசனுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம். அவரை நேரில் சந்தித்த பின் இதுபற்றி முடிவு எடுக்கப்படும். மேலும், ‘செவாலியே’ விருது கிடைத்த கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைவரது சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ