Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’4 வயது முதல் என் கரம் பற்றி வந்தவர்களுக்கு...’ - கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

சென்னை: 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு இவ்விருது அர்ப்பணம் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார். 1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில், ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நீயா?’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அவ்வை சண்முகி’, ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்கள் முக்கிய மைல் கல்லாக அமைந்தன.

57 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன், சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ போன்ற பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இதுதவிர, தேசிய விருதை 4 முறையும், 19 முறை ‘ஃபிலிம்பேர்’ விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கலை, இலக்கியத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ள ஆடியோவில், ''பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அவ்விருதினை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரையும் அறியச்செய்த காலஞ்சென்ற சத்யஜித் ரே-யையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.

இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது? என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக்கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரைமோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவேச மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.

 

இதுவரையான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெருங்கூட்டத்துடன் நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். என்னைப் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறுவெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது.

நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ