Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கருணாநிதி, ஸ்டாலினுக்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?’ பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி

2006ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த போது, அனைத்து அதிமுக உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில், அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்படாத ஒரே சட்டமன்ற உறுப்பினராகிய நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை எடுத்துரைக்கவில்லையா. அந்தத் துணிச்சல் திமுக தலைவர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா என முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

2016-2017-ஆம் ஆண்டிற்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்திற்கு பின் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பதிலுரையில், "இன்று இந்த மாமன்றத்தில் நான் தாக்கல் செய்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இன்றைய விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வைச் சார்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாள்தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் நாட்டு மக்கள் நன்கு அறிவர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 16.8.2016 அன்று இந்த சட்டமன்றத்தில் ‘சில நேரங்களில் .... எங்களுடைய உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே சில வேண்டத்தகாத வார்த்தைகள் சொல்லக் கூடிய வாய்ப்புகள் வருகிறது. அது மைக்கில் வரவில்லை. இருந்தாலும், சில நேரங்களில் சத்தத்தில் வெளிவருகிறது. அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். நான் அதற்காக வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன், உங்களிடத்தில் மன்னிப்புக் கூட கேட்டுக்கொள்ள காத்திருக்கிறேன்’ என்று பேரவைத் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் 79 பேர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவைத் தலைவரால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து ஒரு வார காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை திரிக்கும் விதமாக, திமுகவினரை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக இவ்வாறு செய்யப்பட்டதாக சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு உண்மையிலேயே விவாதங்கள் மீது அக்கறையும், நம்பிக்கையும் இருக்குமேயானால் 10 தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வந்திருக்கலாமே. வயதார்கள், ஆனால் உடனே வெளிநடப்பு செய்து விட்டார்கள். அவர்களில் இருவர் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கலாமே. இன்று வந்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள் கூட இருந்தார்களே. அவர்கள் என்ன பேசத் தெரியாதவர்களா. அவர்களில் இருவராவது தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கலாமே. 2006ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த போது, அனைத்து அதிமுக உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில், அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்படாத ஒரே சட்டமன்ற உறுப்பினராகிய நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை எடுத்துரைக்கவில்லையா. அந்தத் துணிச்சல் என்றைக்காவது திமுக தலைவருக்கு இருந்ததுண்டா. வருங்காலத் தலைவர் என்றும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் நபருக்கு அந்தத் துணிச்சல் இருக்கின்றதா. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், திமுக தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட வில்லையே. துணிவு இருந்தால், வந்திருக்கலாம், வந்திருக்க வேண்டும், பேசியிருக்க வேண்டும்.

காவல் துறை விவாதத்தில் பங்கேற்றால் தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு எவ்வாறு சீர் கெட்டிருந்தது என்பது பற்றி விவாதிக்கப்படும்; அதற்கு எந்த பதிலும் அளிக்க இயலாது என்பதால் தான் தி.மு.க.வினர் எவரும் இன்றைய விவாதத்தில் பங்கேற்கவில்லை என்றே நான் கருதுகிறேன். சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்கள் வந்திருந்தால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வெட்கக்கேடான சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான சம்பவங்களை எல்லாம் எடுத்துரைக்கலாம் என்றும், அதற்கான ஆதாரங்களை இந்தப் போட்டோ ஆல்பத்தில் கொண்டு வந்து, அதை  சபாநாயகருக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். நான் தயாராக வந்தேன். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல், பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

தமிழக மக்கள் எப்போதும் தெளிந்த அரசியல் பார்வையும், தொலைநோக்கு சிந்தனையும் கொண்டவர்கள். விளம்பர யுத்திகளாலும் முழக்கங்களாலும் தங்களை ஏமாற்றிவிட முடியாது என்பதை மீண்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபித்துள்ளார்கள். பொழுதுபோக்குகள் நிறைந்த திரைப்படங்களில் சிறந்த பொருளோ கருத்துகளோ இல்லாமலேயே பாடல்களை வடிப்பதுண்டு. இவை பொழுதுபோக்கு அம்சங்களாகத் தான் திரைப்படங்களிலே இடம் பெறும். பொழுதுபோக்கிற்காக அந்த பாடல்கள் பலராலும் பாடப்படும் என்றாலும், அப்படிப்பட்ட பாடல்களை வைத்து உருவாக்கப்படும் முழக்கங்கள் மூலம் வெற்றி பெற இயலாது என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, ஊர்ஊராக சென்று, வீதி வீதியாகச் சென்று, வீடு வீடாகச் சென்று நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் கேட்டார், அதுமட்டுமல்ல, பாட்டும் பாடினார், பாடியும் பார்த்தார், எதுவும் பலிக்கவில்லை. அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டைக் கொண்ட ஆட்சியே தொடர வேண்டும்; மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் ஆட்சியே தொடர வேண்டும்; அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் ஆட்சியே தொடர வேண்டும்; ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் ஆகியோரை கை தூக்கி விடும் ஆட்சியே தொடர வேண்டும்; அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை முன்னிறுத்தும் ஆட்சியே தொடர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றிய ஆட்சியே தொடர வேண்டும், என்ற கருத்துகளை தமிழக மக்கள் கொண்டிருந்ததால் தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாம் முறை எங்களுக்கு வெற்றியை அளித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தி தமிழக மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை மீண்டும் எனக்கு நல்கியுள்ளார்கள்" என்று பேசினார்.

சகாயராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close