Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''சர்வாதிகார ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள்!'' - ஜெ.அன்பழகன் தாக்கு

 

முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போதைய 15-வது சட்டசபை கூட்டத்தொடர் பெரும் அமளிதுமளிக்கிடையே நடந்து வருகிறது. சபையில் இரு பெரும் கட்சிகளாக இருக்கும் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கும், எதிர்க் கட்சியான தி.மு.க-வுக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வீட்டுவசதி மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திருப்பூர் தெற்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசினார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கைவைத்தனர். சபாநாயகர், 'அதை நீக்க முடியாது' என்று கூறியதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடந்த 17-ம் தேதி சபையில் இருந்த தி.மு.க உறுப்பினர்கள் 79 பேரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கோஷமிட்டனர். அடுத்துப் பேசிய அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். சபாநாயகரும் அதை ஏற்றுக்கொண்டு தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதன்மூலம் தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதா பேசும் காவல் துறை மானியம் மீதான விவாதக் கோரிக்கையில் பங்குபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், அன்றைய தினம் அவைக்கு வராத தி.மு.க உறுப்பினர்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்ற வாசலிலேயே போட்டி சட்டமன்றம் நடத்தி, நடித்துக் காட்டினர். இதனால் ஸ்டாலின் உட்பட 60 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவியது.

உயர் நீதிமன்றம் உத்தரவு!

இன்று சட்டமன்றம் கூடிய நிலையில், தி.மு.க வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும், சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதற்கு அனுமதி கேட்டும் வழக்குத் தொடர்ந்தனர். இது நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், சஸ்பெண்ட் விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கை பற்றி நீண்டநேரம் விவாதிக்க வேண்டிய தேவை இருப்பதால், செப்டம்பர் 1-ம் தேதிக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருபுறம், நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நடந்துகொண்டிருந்து. அதே நேரத்தில், எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் இருக்கும் தி.மு.க சட்டமன்ற கொறடா சக்ரபாணியின் வீட்டில் தி.மு.க உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில், தி.மு.க சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். மீதமிருந்த 10 உறுப்பினர்களில் கருணாநிதி, கும்பகோணம் அன்பழகன் தவிர்த்து, 8 உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் பேச வாய்ப்புக் கேட்டபோது சபாநாயகர் மறுத்தார். இதனால், அவர்களும் வெளிநடப்புச் செய்தனர். அதனைத் தொடந்து அவர்களும் எம்.எல்.ஏ விடுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வரலாற்று இருட்டடிப்பு!

இதுகுறித்து சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனிடம் பேசினோம். ''இது ஒரு வரலாற்று இருட்டடிப்பு. இதுவரை எங்குமே நடக்காத வகையில் இவர்கள் சட்டமன்றத்தை நடத்திவருகிறார்கள். இது புதிய பிரச்னை அல்ல... ஆரம்பத்திலேயே சட்டமன்றத்தில் சரியான முறையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. சிறப்பாகச் செயல்படுவார்கள் அல்லது இவர்களால் நமக்குப் பிரச்னை ஏற்படும் என்று எண்ணி முக்கியமான எதிர்க் கட்சி உறுப்பினர்களைக் கடைசி இருக்கைக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இதுவே, ஓர் ஒடுக்குமுறைதான். இதுவரை எனக்கு மைக்கில் பேச வாய்ப்பே தரப்படவில்லை. முக்கியமாக எங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுவது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படுவதே கிடையாது. மாறாக, அ.தி.மு.க உறுப்பினர்களின் புகழுரை மட்டுமே அதில் பதிவுசெய்யப்படுகிறது. சட்டமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் இவர்கள்  ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, ஏழு அமைச்சர்கள் அதைக் குறுக்கிடுவார்கள். அப்போது எல்லாம் சபாநாயகர் எதுவும் சொல்லமாட்டார். இதுவே, ஆளும் கட்சி உறுப்பினர் பேசும்போது எங்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பே தரமாட்டார்கள். முக்கியமாக முதலமைச்சர் பேசும்போது ஒருமுறைகூட எங்களுக்கு வாய்ப்பே தரப்படவில்லை. அப்படி எந்த ஒரு விதியும் சபை விதிமுறைகளில் இல்லை. தங்கள் இஷ்டப்படி இவர்கள் சபையை நடத்திவருகிறார்கள்'' என்றார்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ விடுதியில் இருந்து ஸ்டாலின், பொன்முடி, நேரு ஆகியோர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். வட சென்னையில் இன்று மாலை தி.மு.க தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளும் 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்கிற பெயரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- மா.அ.மோகன் பிரபாகரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ