Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசியக்கொடியை இப்படித்தான் ஏற்றுவதா? சர்ச்சையில் நகராட்சித் தலைவர்

சுதந்திரத்தினத்தன்று தேசியக்கொடியை பல்லாவரம் நகராட்சித் தலைவர் தலைகீழாக ஏற்றியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. எந்தவித அசம்பாவிதமின்றி சுதந்திர தின விழா சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. இந்தநிலையில், தேசியக்கொடியை தலை கீழாக ஏற்றிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சித் தலைவர் கே.எம்.ஆர். நிஷார்அகமது.

ஏற்கனவே, கடந்த குடியரசு தினத்தின் போது பம்மல் நகராட்சித் தலைவர் இளங்கோவன் செல்போனில் பேசியபடி தேசியக்கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய சர்ச்சையில் சிக்கிய இளங்கோவனை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  அ.தி.மு.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் பல்லாவரம் தொகுதியில் இடம்பிடித்தார். பிறகு அவரது எதிரணியினர் இந்தத் தகவலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்ததும் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார் இளங்கோவன். அவருக்குப் பதிலாக சி.ஆர்.சரஸ்வதி மாற்றப்பட்டார். இளங்கோவனைப் போல நிஷார் அகமதுவின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவதாக சொல்லப்பட்டது. இதற்காக அவர் நேர்கானலிலும் பங்கேற்றார். ஆனால் அவருக்கு சர்ச்சை காரணமாக சீட் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சுதந்திரத் தினத்தன்று நிஷார் அகமது, தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியதை பார்த்தவர்கள் தகவலை உடனடியாக அவரிடம் சொல்கிறார்கள். உடனே சுதாரித்துக் கொண்டு தேசியக்கொடியை அவசர அவசரமாக கீழே இறக்கி மீண்டும் அதை சரிசெய்து ஏற்றி இருக்கிறார். இந்த சில நிமிடங்களுக்குள் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடியின் படம் பிடிக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லை அ.தி.மு.க, உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்குமா என்பது மட்டுமே இப்போதைய கேள்வி.

இதுதொடர்பாக கருத்து கேட்க நிஷார் அகமதுவை செல்போனில் பேச தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ