Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013ல் மனுவுக்கு 2016ல் பதில்..! சென்னை மாநகராட்சியின் 'டக்'..!

பேருந்து நிழற்குடைகள் அமைப்பது தொடர்பாக மீண்டும் சென்னை மாநகராட்சியிடம் 2013ல் கொடுத்த மனுவுக்கு 2016ல் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார் தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ.

இதுகுறித்து தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், "கோடை காலத்தில் மக்களுடைய தாகத்தை தீர்ப்பதற்காக அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும். இதையொட்டி 2012ல் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வினருக்கு ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தார். அதன்படி பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். அவர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவு 29.3.2012ல் மனு கொடுத்தேன். அந்த மனு சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சியிலிருந்து எனக்கு கடந்த 28.5.2012ல் பதில் அனுப்பப்பட்டது. அதில் நிழற்குடைகள் அமைப்பதற்கான டென்டர்கள் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேயர் சைதை துரைசாமி, பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் புகார் மனு கொடுத்த என்னைப் போன்ற என்.ஜி.ஓக்களை அழைத்து அவர் பேசினார். அப்போது நீங்கள் கொடுத்த எத்தனை புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எடுக்காதவைகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். பஸ் நிழற்குடைகள் அமைப்பது தொடர்பாக மீண்டும் 16.4.2013ல் மனு கொடுத்தேன். இந்த மனுவுக்கு 9.8.2016ல் பதில் அனுப்பியுள்ளது சென்னை மாநகராட்சி. அந்த பதிலில்
சென்னை மாநகராட்சியில் 400 நவீன நிழற்குடைகள் கட்டுதல், பராமரித்தல் ஒப்படைத்தல் என்ற முறையில் பணி நடந்து வருகின்றன. 250 நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒரே இடத்தில் இரண்டு, மூன்று பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கு பதிலாக ஒரே ஒரு நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். அடுத்து கூடுதலாக தேவைப்படும் இடங்களில் பிறகு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பதில் அனுப்பவே இத்தனை நாட்கள் என்றால் நிழற்குடைகள் அமைக்கப்போவது எப்போது" என்றார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "சென்னையில் பேருந்து நிழற்குடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடைகள் அமைப்பதை தவிர்த்து வருகிறோம். கடிதம் தாமதமானது குறித்து இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ