Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலில் போட்டியிடத் தேர்வு நடத்துவது சாத்தியமா?

சிதறு தேங்காய் பொறுக்கும், ‘அமாவாசை’ எம்.எல்.ஏ ஆகி, மந்திரி ஆகி அதிகார போதையில் ஆட்டம் போடுகிறார் என ஓர் அரசியல்வாதியைப் பற்றிக் கூறும் ‘அமைதிப்படை’ சினிமாவின் கதைதான் நிஜமான அரசியலின் சூழலாக இருக்கிறது. இன்னொருபுறம், பல்வேறு துறைகளில் நுழைவுத்தேர்வு எழுதினால்தான் வேலை கிடைக்கிறது. அரசியல்வாதிகளோ, எந்தவிதத் தேர்வும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் தலைமைக்குப் பணத்தைக் கொடுத்து, தேர்தலில் போட்டியிட்டு வாக்காளர்களுக்கு பணவலை வீசிப் பதவிக்கு வந்துவிடுகின்றனர். ‘தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு தேர்வு வைத்தால் என்ன’ என்று மதுரையைச் சேர்ந்த சுப்ரமணிய பாரதியார் சிந்தனைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் என்பவருக்குத் தோன்றி இருக்கிறது.

தேர்தல் ஆணையத்துக்கு யோசனை!

தனது யோசனையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தட்டிவிட்டார். எம்.எல்.ஏ., எம்.பி பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டும். தேர்வுக்குப் படிப்பதற்குத் தேர்தல் ஆணையமே புத்தகங்கள் வழங்கவேண்டும்; சட்டசபை, நாடாளுமன்ற அவைகளின் அதிகாரங்கள், கடமைகள் உள்ளிட்ட விவரங்கள் அந்தப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்; குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ ஆகியோரின் பதவிகளுக்கான பணிகள், கடமைகள் குறித்து தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றெல்லாம் அவர் தமது யோசனையில் கூறியிருக்கிறார். தேர்வில் 35 அல்லது 40 மார்க் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்கிறார்களா என்பதை அறிய, தகவல் உரிமைச் சட்டப்படி தேர்தல் ஆணையத்திடம் தகவலாகக் கேட்டிருக்கிறார். அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில், “தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்த உங்களது யோசனை பரிசீலனையில் இருக்கிறது. அதன்மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தேர்தல் ஆணையத்தின் தகவல் அலுவலர் கூறியிருக்கிறார்.

நடைமுறை சாத்தியமில்லை!’’

இந்தப் பரிசீலனை, கருத்தாக உருமாறி தேர்தல் ஆணையத்தில் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, சட்டமாகி, அந்தச் சட்டத்தை நமது எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் விவாதித்து, நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து அமலுக்கு வருவதற்குப் பல கட்டங்களைத் தாண்ட வேண்டி இருக்கிறது. உண்மையாகவே இப்படி ஒரு தேர்வு நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?...

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் பேசினோம். ‘‘தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல், தேர்தல் குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதனை அரசு ஏற்கவில்லை. அதேபோல தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களைத் தடுக்க வலுவான சட்டத்திருத்தமும் கொண்டுவரப்படவில்லை. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களால்தான் சட்டமே இயற்றப்படுகிறது என்ற நிலை இருக்கிறது.

இதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. ஒருவேளை, இந்த யோசனை செயல்பாட்டுக்கு வருகிறது என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு தொகுதியிலும் 16-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், நாடு முழுவதும் 543 தொகுதிகளிலும் 8,600-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேர்வு நடத்தவேண்டும். அனைத்து மாநிலங்களையும் சேர்த்து 3,500 எம்.எல்.ஏ தொகுதிகள் உள்ளன. அதில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், அத்தனை பேரும் தேர்வு எழுத நேரிடும்.

தேர்வில் வெற்றிபெறாத வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மாற்றுவதற்கு முன்வருமா என்ற கேள்வி இருக்கிறது. முதலில் இப்படியெல்லாம் தேர்வு நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் ஆட்கள் இல்லை. எனவே, இதுவெல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லை. மற்றபடி எம்.எல்.ஏ-வாகவோ அல்லது எம்.பி-யாகவோ தேர்வாகி வருபவர்களுக்குச் சபையின் செயலக அதிகாரிகள் தனித்தனியே விதிகள், கடமைகள், மரபுகள் குறித்துச் சொல்லி வருகின்றனர்” என்றார்.

‘‘மக்கள் சேவையே முக்கியம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், “அரசியல் சாசனம் சொல்கிறபடி எம்.எல்.ஏ., எம்.பி-க்களுக்கு விதிமுறைகள், வரம்புகள் இருக்கின்றன. வேட்பாளர்களுக்கு அப்படி ஒரு தேர்வு நடத்தப்பட்டால், ஒரு பட்டதாரியாக இருப்பவர்கள் தேர்ச்சிப் பெற்றுவிட முடியும். கிராமத்துப் பின்னணியில் இருந்து படிக்காமல் தேர்தலில் போட்டியிடும் நபர் எப்படி வெற்றிபெற முடியும்.

தனித்தொகுதிகளில் போட்டியிடுபவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடத்துவார்களா... என்னைப் பொறுத்தவரை மக்கள் சேவையில் விருப்பம் உள்ள நபர் தேர்தலில் போட்டியிடலாம். மெத்தப் படித்த ஒரு நபர், அதிக ஊழல் செய்பவராக இருக்கிறார் என்ற அரசியல் சூழல்தான் இங்கு நிலவுகிறது. எனவே, இவையெல்லாம் சாத்தியப்படாது” என்றார்.

‘தேர்வில் முறைகேடு நடக்கும்!

சட்டப் பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். “ இந்தியாவில் 100 சதவிகிதம் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை. எனவே, இதுபோன்று எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்குத் தேர்வு வைப்பதெல்லாம் சாத்தியமில்லை. காமராஜர் அதிகம் படிக்காதவர்தான். அவர், ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நடத்தவில்லையா என்ன?... வேட்பாளர்களுக்குத் தேர்வுவைத்தால் அதில், முறைகேடு நடப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. தேர்வு எழுதிய வேட்பாளர்கள், ‘நான் நன்றாகத்தான் எழுதினேன். ஆனால், எனக்கு மார்க் குறைவாகப் போட்டுவிட்டார்கள்’ என்று சொல்லி வழக்குத் தொடருவார்கள். இதனால் அந்தத் தொகுதியின் தேர்தல் நிறுத்தப்படலாம்.

தற்போது பல அரசியல் கட்சிகளில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் எல்லாம் எம்.பி., எம்.எல்.ஏ-வாக ஆகி இருக்கிறார்கள். அவர்களுக்குத் தகுதிகள் இல்லையா என்ன? தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு வேண்டுமானால், பயிற்சிகள் கொடுக்க வழி செய்யலாம்” என்று முடித்துக்கொண்டார்.

- கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்