Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' வைகுண்டராஜனுக்கு விருந்து வைத்தாரா அ.தி.மு.க நிர்வாகி?'  -சசிகலா புஷ்பா ஆதரவாளர் பதவி பறிப்பு பின்னணி 

.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் பா.நாராணயப் பெருமாள். ' மகன் திருமண வரவேற்பில் வைகுண்டராஜன் தரப்பு ஆட்கள் கலந்து கொண்டதே பதவி பறிப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர் ராதாபுரம் அ.தி.மு.கவினர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக கட்சிப் பணியைத் தொடங்கினார் நாராயணப் பெருமாள். தொடக்கத்தில் சசிகலா புஷ்பா எம்.பியின் எதிர்ப்பாளராகச் செயல்பட்டவர், பின்னர் தீவிர ஆதரவாளராக மாறினார். இதையடுத்து மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அந்தளவிற்கு கட்சி மேலிடத்தில் செல்வாக்குமிகுந்தவராக மாறினார். இன்று மாலை, ' நாராயணப் பெருமாளை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக' அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. சட்டசபை நடந்து வரும் நேரத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. " அவர் மீதான புகார்களுக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் அணிவகுத்ததே பதவி பறிப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" திருநெல்வேலி மாவட்டத்தில் நீண்டகாலமாக கட்சிப் பணியில் இருக்கிறார் நாராயணப் பெருமாள். சசிகலா புஷ்பா ஆதரவில் அடுத்தடுத்த பதவிகளைப் பெற்றார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி கிடைக்க முக்கியக் காரணமே பழனியப்பன்தான். சட்டப் பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார் எனப் பல புகார்கள் வந்தன. 'தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கிறார்' என ராதாபுரம் தொகுதியில் இருந்து சிலர் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர். சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், கடந்த வாரம் தென்காசியில் முக்கிய காண்ட்ராக்டர் ஒருவரை சந்தித்துப் பெரும் தொகையைப் பெற்றார். இந்த ஒப்பந்ததாரரை கட்சி வட்டத்தில் இருந்து மேலிடம் ஒதுக்கி வைத்திருக்கிறது. அவர் பணம் பெற்ற விவரம், அம்மாவின் கவனத்திற்கு வந்துவிட்டது. 

இதையடுத்து, கடந்த வாரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ' மேலிடம் தன்னைக் கண்காணிக்கிறது' என்பது தெரிந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுடன் நட்பு பாராட்டினார். நேற்று வள்ளியூர் பகுதியில் அவருடைய மகன் பால ரிச்சர்ட்டின் திருமண வரவேற்பு விழாவை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனின்ன் ஆட்கள் வந்துள்ளனர். ' அண்ணாச்சி கொடுக்கச் சொன்னார்' என அன்பளிப்பையும் அளித்துள்ளனர்.  'சசிகலா புஷ்பா விவகாரத்தை வளர்த்துவிடுவதே வைகுண்டராஜன்தான்' என்பதால் கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். இந்நிலையில், திருமண வரவேற்புக்கு வைகுண்டராஜன் ஆட்கள் வந்த தகவலை அப்போதே கார்டன் நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்பினார் ராதாபுரம் கட்சி நிர்வாகி ஒருவர். தகவலை அனுப்பும்போது, ' வரவேற்புக்கு வைகுண்டராஜனே வந்துவிட்டார். விருந்தில் பங்கேற்றார்' என்றரீதியில் தகவல்கள் வந்துவிட்டன. ' இதற்கு மேலும் பதவியில் நீடிக்க விடுவது சரியல்ல' என்பதால்தான், அதிரடி முடிவு எடுத்தார் அம்மா. தற்போது நாராயணப் பெருமாளுடன் நட்பு பாராட்டிய சீனியர்கள், நெல்லை மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பத்துக்கும் மேற்பட்டவர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது கார்டன் டீம். இன்னும் சிலரது பதவி பறிக்கப்படலாம்" என்றார் விரிவாக. 

சசிகலா புஷ்பா பாணியிலேயே , தலைமைக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டதாலேயே நாராயணப் பெருமாள் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. ' அவர் மீது வழக்குகள் பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

-ஆ.விஜயானந்த் 

படம்:எல்.ராஜேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ