Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பா புயலில் வீழ்ந்த நாராயண பெருமாள்!

நெல்லை: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்ட பின்னர், அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நாராயண பெருமாள் சேர்ந்து உள்ளார். அவரிடம் இருந்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு இருப்பது கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு விவாதத்தை கிளப்பிய சசிகலா புஷ்பா விவகாரம், மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா, கட்சித் தலைமை தன்னை அடித்து துன்புறுத்தி ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக மாநிலங்களவையில் பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பினார். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பின. பண மோசடி, பாலியல் தொந்தரவு என சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.

இதனால், தமிழகத்தில் இருந்து அவரது ஒட்டு மொத்த குடும்பமும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். அத்துடன், தன் மீதும் குடும்பத்தினர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளில் ஜாமீன் கேட்டு அவர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்க அ.தி.மு.க தலைமை மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்பதில் சசிகலா புஷ்பா பிடிவாதமாக இருப்பதால், கட்சித் தலைமையின் கோபம் மேலும் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில், வீட்டில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் ஆகஸ்ட் 29-ம் தேதி ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீதிமன்றத்துக்கு அவர் வருவாரா? என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. ஒருவேளை அவர் நேரில் வந்தால், அவரை வேறு வழக்குகளில் கைது செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதை தவிர்க்க சசிகலா புஷ்பா தரப்பில் டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் சட்டரீதியான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

கலக்கத்தில் கட்சிக்காரர்கள்...

அதே சமயம் அ.தி.மு.க-வையும் அதன் தலைவரான ஜெயலலிதாவையும் எதிர்த்து போராடும் முடிவுக்கு வந்துவிட்ட அவர், தனக்கு நெருக்கமான சிலரின் மூலமாக தமிழக எம்.எல்.ஏ.க்களில் சிலரை கட்சிக்கு எதிராக களம் இறக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அவருக்கு நெருக்கமான நபர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் குறித்த பட்டியல் எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களிடம் இருந்து கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.


சசிகலா புஷ்பா

ராதாபுரம் தொகுதியை சேர்ந்தவரும் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞ்ரணிச் செயலாளராக இருந்தவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பணகுடி நகரச் செயலாளராக இருந்த லாரன்ஸ் ஆகியோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து மட்டும் அல்லாமல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த சண்முகநாதன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

சசிகலா புஷ்பா மூலமாக அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளர், புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்கி அழகு பார்க்கப்பட்ட நாராயண பெருமாள் மீது சந்தேக பார்வை பதிந்தது. அதனால், அவரிடம் இருந்து புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன் பறிக்கப்பட்டது. தற்போது அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் ஜெயலலிதா பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். நாராயண பெருமாளின் மகன் பால ரிச்சர்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 22-ம் தேதி வள்ளியூரில் நடந்தது. அதில் அரசியல் கட்சியினர் பலரும் பங்கேற்றனர். அங்கு வந்தவர்களின் பட்டியலும் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால், அந்த நிகழ்ச்சிக்கு சென்ற கட்சிக்காரர்கள் தற்போது கலக்கம் அடைந்து இருக்கிறார்கள்.

வீழ்ச்சியின் கதை...

அ.தி.மு.க.வின் நீண்ட கால விசுவாசி, நாராயண பெருமாள். ஆனாலும், தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அப்பாவுவுடன் அவருக்கு நெருக்கம் அதிகம். ராதாபுரம் தொகுதியில் அப்பாவு எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, அ.தி.மு.க சார்பாக அவரை எதிர்த்து அரசியல் செய்யாமல் ஒதுங்கியே இருந்ததாககூட அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில்கூட, தொகுதி எம்.எல்.ஏ.வின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை என்று விமர்சனம் எழுந்தது. ஆனாலும், இந்த புகார்களை எல்லாம் மீறி ராதாபுரம் ஒன்றியச் செயலாளராக இருந்த நாராயண பெருமாளை புறநகர் மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் என கட்சியில் பொறுப்புகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் சசிகலா புஷ்பா.


தி.மு.க.வினரை பாராட்டும் நாராயண பெருமாள்

இதற்கு காரணம், சசிகலா புஷ்பாவின் நெருங்கிய உறவினர், நாராயண பெருமாள். அதன் காரணமாகவே அவருக்கு பொறுப்புகளை வாங்கிக் கொடுத்தார். இதே போல, சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைத்ததற்கும், அவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்ததற்கும் முக்கிய காரணம், சசிகலா புஷ்பா. அவரது தாய்மாமா உறவுக்கு சொந்தக்காரர், சண்முகநாதன். அதனால் அவரது வளர்ச்சிக்கு சசிகலா புஷ்பா உதவிகளை செய்தார். சண்முகநாதனின் தயாரும் நாராயண பெருமாளின் தாயாரும் சகோதரிகள். அந்த உறவில், சசிகலாவின் உறவுக்காரராக நாராயண பெருமாள் இருந்தார் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட புகார் பட்டியல்...

நாராயண பெருமாள் மீது அவரது சொந்த ஊரான சவுந்திரபாண்டிய புரத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவர் புகார் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாராயண பெருமாள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த விவகாரங்களை மறைத்து அவர் கட்சிப் பொறுப்புகளை வாங்கி இருக்கும் விவகாரம் குறித்து ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், சில வருடங்களுக்கு முன்பு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலின்போது கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து தி.மு.க.வை சேர்ந்த இருவரை ஜெயிக்க வைத்ததாக புகார் எழுந்தது. அ.தி.மு.க வேட்பாளரை தோற்கடித்த தி.மு.க.வைச் சேர்ந்த நபர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி அடைந்த விஷயமும் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன், தி.மு.க.வை அப்பாவு உடன் நெருக்கமாக இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் அனுப்பப்பட்டது.


நாராயன பெருமாளும், அப்பாவுவும்

சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து கட்சிக்குள் எதிர்ப்பை கிளப்ப தொழில் அதிபர் ஒருவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட், ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்ததாக சொல்கிறார்கள். ஆனாலும், நாராயண பெருமாளிடம் இருந்து ஒரே நேரத்தில் அனைத்து பொறுப்புகளையும் எடுத்தால், அவர் சார்ந்த நாடார் சமூகத்தின் அதிருப்தி அ.தி.மு.க. மீது உருவாகும் என உளவுத்துறையினர் ‘நோட்’ அனுப்பி இருக்கிறார்கள். அதனாலேயே சில தினங்களுக்கு முன்பு அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்டது. தற்போது அமைப்புச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டு விட்டது. விரைவில், அவர் மீதான வழக்கு தூசு தட்டப்படும் என்றும் சொல்கிறார்கள்.

ராஜினாமா செய்வார்களா சில எம்.எல்.ஏ.க்கள்...

சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விவரம் ஜெயலலிதா கவனத்துக்கு சென்றுள்ளது. அந்த எம்.எல்.ஏ.க்களின் பட்டியலில் இருப்பவர்களை உளவுத்துறையினர் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே, சசிகலா புஷ்பாவால டெல்லில் அவமானம் ஏற்பட்டு விட்டது. அதுபோல, அவருக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.க்களால் தனக்கு தமிழகத்தில் அவமானம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறாராம். அதனால் அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தமிழகத்தில் ஏற்கெனவே காலியாக இருக்கும் இரு தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ஆனால், இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார்கள், கார்டனுக்கு நெருக்கமாக இருக்கும் கட்சிக்காரர்கள். இதனால் இந்த பட்டியலில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு கலக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும், அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நடக்கத் தொடங்கும் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

- ஆண்டனிராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ