Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனநாயகத்துடன்தான் நடக்கிறதா தமிழக சட்டப்பேரவை?

 

'' 'நமக்கு நாமே' என்று கூக்குரலிட்டவர்கள் கோட்டையைப் பிடிக்கவில்லை’’ - திருப்பூர் தெற்கு அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரனின் இந்தப் பேச்சால் கொதித்துப்போன தி.மு.க உறுப்பினர்கள், கோஷமிட்டனர்... சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்... குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்... போட்டி சட்டசைபை நடத்தப்பட்டது. இப்படித்தான் சட்டபையில், சீன்கள் அரங்கேறி வருகின்றன. போட்டி சட்டசபை நடத்தியதற்காக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின்  உட்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.

சட்டசபையின் நடவடிக்கைகள் குறித்து அரசியல் தலைவர்களிடம் பேசினோம்.

''ஜெயலலிதா, சட்டமன்றத்தை போயஸ் கார்டன் சமையில் அறையில் நடத்தலாம்!''  

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ்: தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில், சட்டசபையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா என்ன நினைக்கிறாரோ, அவற்றை  சபாநாயகர் மூலம் நிறைவேற்றுகிறார். இப்படித் தன்னுடைய விருப்பத்துக்குச் சட்டசபையை ஜெயலலிதா நடத்த விரும்பினால், போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின்  சமையில் அறையிலேயே நடத்தலாம். சபாநாயகரை பொறுத்தவரையில் தனித்தன்மையோடு இல்லாமல் ஆட்டுவிப்போர் சொல்லுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார். பார்ப்பதற்கு, சபாநாயகர் வில்லன்போல் இருக்கிறார் என்றால், அவரது நடவடிக்கைளும் வில்லத்தனமாகத்தான் உள்ளன. ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதில் முதன்மையானவராக இருக்கிறார் என்பதை வரலாறு அறியும். போட்டி சட்டசபையை, தி.மு.க நடத்தியது போன்று ஏற்கெனவே இரண்டு மூன்று முறை நடந்துள்ளது. சட்டசபையில் வாய்ப்புக் கிடைக்காதபோது வேறு என்ன செய்ய முடியம? சட்டசபைக்கு வெளியில் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.''

''நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை இல்லை!''

ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்: ''சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து தி.மு.க-வை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயக விராத நடவடிக்கை. நாடாளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்த உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஜெயலலிதாவின் ஆலோசனை இல்லாமல், சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஆக்கபூர்வ விவாதம் சட்டசபையில் நடைபெறவில்லை. தி.மு.க-வினர் போட்டி சட்டசபை நடத்தியது குறித்துப் பேசத் தேவையில்லை. தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதையும், தி.மு.க-வினர் போட்டி சட்டசபை நடத்துவதையும் நாம் ஒன்றுபடுத்தக் கூடாது.''

"எதிர்க் கட்சிகள் இல்லாதது ஆரோக்கியமற்ற செயல்!''

இரா.முத்தரசன், சி.பி.ஐ.: ''சட்டமன்ற விவாதங்களை இருதரப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கையில் எடுத்துச் செல்லவேண்டும். ஜெயலலிதாவை, ஒருமையில் பேசுகிறார்கள்... கருணாநிதியை, ஒருமையில் பேசுகிறார்கள் என்று கூறிப் பிரச்னையை எழுப்புவதுதான் சட்டமன்றமா? தமிழகத்தில் பேசுவதற்குப் பிரச்னையே இல்லையா? தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தம்மைப் பெருமைபடுத்திக்கொள்வதிலும், மற்றொருவரைத் தாழ்த்திப் பேசுவதிலும்தான் நேரத்தைச் செலவிடுகிறது. அதைப்பற்றிச் சட்டசபைக்குச் செல்வோர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவையை அமைதியாகக் கொண்டு செல்வதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்குப் பொறுப்பு இல்லை. சபாநாயகர் நடுநிலையாக நடக்கவேண்டும். சபாநாயகரைக் கேலி, கிண்டல் செய்வதையும் தி.மு.க செய்யக் கூடாது. மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்போது எதிர்க் கட்சிகள் இல்லாமல் நடத்துவது முற்றிலும் ஆரோக்கியமற்ற செயல்.''

''சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும்!''

தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.க.: ''சட்டமன்றம், எப்படி நடக்கக் கூடாதோ அப்படி நடந்துவருகிறது. மக்கள் பிரச்னையைப் பற்றி யாரும் பேசவில்லை. சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாகப் போய்கொண்டிருக்கிறது. ஸ்டாலினை சட்டமன்ற வளாகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்தது தவறு. ஆரம்பகால சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆரோக்கியமாகச் சென்றது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் விவாதங்கள் கவலை அளிக்கின்றன. சட்டப்பேரவைக்குள்  போகும்போதே அவர்களைப் பேசவிடக் கூடாது என்றும், அவர்களுக்கு கவுன்டர் கொடுக்க வேண்டும் என்றும் செல்கிறார்கள். இந்தக் கோளாறுதான் இத்தனை பிரச்னைக்கும் காரணம். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும்போது சட்டமன்ற கூட்டத்தொடரை மட்டும் ஏன் ஒளிபரப்புச் செய்யக் கூடாது? சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கடமைகளைச் சரிவர செய்தால் மட்டுமே ஜனநாயகத்தின மீது மக்கள்   நம்பிக்கை கொள்வார்கள்.''

''சபாநாயகர் 100 சதவிகிதம் ஆளும் கட்சியின் அடிமட்ட தொண்டன்!''

தொல்திருமாவளவன், வி.சி.க.: தி.மு.க உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது எந்த நிலையிலும் ஏற்புடையது அல்ல. இது, ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் எதிரானது. தனிநபர் விமர்சனங்கள், தாக்குதல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கிச்செல்வது மரபல்ல. சபாநாயகர் 100 சதவிகிதம் ஆளும் கட்சியின் அடிமட்ட தொண்டனாகச் செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு அதிக நேரம் கொடுத்துள்ளார்கள். நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கே சென்று கூச்சலிட்டாலும் அவர்களை வெளியேற்றுவதில்லை. ஆளும் கட்சியினர் பேசுவது அவைக்குறிப்பில் அப்படியே இருப்பதும், எதிர்க் கட்சியினர் பேசுவது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதும் எதேச்சதிகாரத்தின் போக்கு. தி.மு.க உறுப்பினர்கள் அடாவடியாக நடந்துகொண்டார்கள் என்பதைவிடச் சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டார் என்பதான் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம். சபாநாயகர்  என்று அறிவிக்கப்பட்டாலே அவர் ஆளும் கட்சியின் கொத்தடிமையாக ஆக்கப்படுகிறார். முதல்வரின் விரல் அசைவைப் பொறுத்து அவரது நடவடிக்கைகள் அமைய வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் இதுபோன்ற அவலங்கள்தான் அரங்கேறி வருகின்றன. சுதந்திரமாகச் செயல்படுபவர்கள் யாரும் சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.''
 
''அவை நடத்துவைதைத் தெரிந்துகொள்ள வேண்டும்!''

அன்புமணி ராமதஸ், பா.ம.க.: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது கடந்த 3-ம் தேதிதான். மக்கள் பிரச்னை குறித்து விவாதித்தபோது கருத்து மோதல் ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வயக்காட்டுப் பொம்மைகள், கொத்தடிமைகள் என இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசுகிறபோது தி.மு.க-வினரை வம்புக்கு இழுப்பது உண்மை. அவர்களுடைய இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. 'காவல் துறை மானியக் கோரிக்கையின்போது கருணாநிதி சட்டசபைக்கு வந்து பேசியிருக்க வேண்டும்' என்று  முதல்வர் கூறியுள்ளார். கலைஞர், அவைக்குச் சென்றிருந்தால் அ.தி.மு.க-வினர் நாகரிகமாக நடந்திருப்பார்களா என்பது  ஐயம்தான். அவையை எப்படி நடத்த வேண்டும்... அவையில், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அறிஞர் அண்ணாதான் உதாரணம். அவர்கள் வழிவந்தவர்களாகச்  சொல்லிக்கொள்பவர்கள் முதலில் அதைத் தெரிந்தகொள்ள வேண்டும்.''

தொகுதிப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதே எம்.எல்.ஏ-க்களின் கடமை!
 
- கே.புவனேஸ்வரி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ