Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமதாஸ் வழியில் விஜயகாந்த்...?

வ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்புத் தினமாகக் கொண்டாடி ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கும் நிதி உதவி வழங்கிவந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட அவரது கட்சியினர் ஜெயிக்காததால், சற்றுச் சோர்வுடன் காணப்பட்டனர்.

வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்துவந்தார் விஜயகாந்த். இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்குக் கடந்த 23-ம் தேதி அவர் மனைவி பிரேமலதா, இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் ஆகியோருடன் விஜயகாந்த் வந்தார். இவர்களைத் தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். பிறந்தநாளை ஒட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.

அதில் பேசிய பார்த்தசாரதி, “தமிழர்களுக்கு இன்னல் என்றால், தமிழகம் மட்டும் அல்ல... உலகம் முழுவதும் ஓடோடிச்சென்று உதவி செய்பவர், நம்முடைய கேப்டன். அவருடய பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; ஏழைகளுக்கு உதவவேண்டும்; இந்தப் பிறந்த நாள் விழாக்களை நமது கட்சியினர் பயனுள்ளதாகச் செலவழிக்க வேண்டும். கேப்டன், இன்று ஓர் அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அதை நாம் செய்வோம்’’ என்றார்.

‘‘காவலர்களை ஜெயலலிதா ஏமாற்றிவிட்டார்!’’
அடுத்துப் பேசிய விஜயகாந்த், ‘‘நமக்குப் பதவி என்பது பெரிய விஷயமே இல்லை. மக்கள் மனதில் நாம்தான் இருக்கிறோம். இப்போது சட்டசபையா நடக்கிறது? மக்களை வேதனைப்படவைப்பதே ஜெயலலிதாவின் வேலையாகிவிட்டது. காவல் துறை மானியக் கோரிக்கையின்போது கோட்டையில் நடந்த கூத்து, வேறு எந்த ஆட்சியிலாவது நடந்திருக்கிறதா? மிகவும் எதிர்பார்த்து இருந்த காவல் துறை மானியக் கோரிக்கையில் காவலர்களை ஜெயலலிதா ஏமாற்றிவிட்டார். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வதே தே.மு.தி.க-வின் கொள்கை. அதை நமது கட்சியினர் செய்யவேண்டும்.

இந்த ஆண்டு, ‘பசுமைத் தமிழகம் திட்டம்’ தொடங்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1,000 மரக்கன்றுகள் வீதம் 234 தொகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். தமிழகம் முழுவதும் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவேண்டும். நட்ட மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றி ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதோடு இல்லாமல், அந்தந்த பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு வழக்கம்போல நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். ‘மக்களுக்காக, மக்களுடன் இருப்போம்’ என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்ணையும் இல்லை. உங்களை நான் விரைவில் சந்திப்பேன்” என்று பேசிவிட்டுக் கட்சி தொண்டர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி நிர்வாகிகள், மாணவ - மாணவிகள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையை விஜயகாந்த் வழங்கினார். ஒவ்வோர் ஆண்டும், ‘வறுமை ஒழிப்பு நாள்’ என்று அறிவித்து பிறந்த நாள் விழா எடுக்கும் விஜயகாந்த், இந்த ஆண்டு ‘பசுமைத் தமிழகம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்.

இந்தச் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘தமிழகத்தில் ஏழ்மை, வறுமை இல்லா நிலையை உருவாக்க சூளூரைப்போம்” என்றார். அதனால்தான் என்னவோ, இது அரசின் வேலை என்று இந்த ஆண்டு விஜயகாந்த் வறுமை ஒழிப்புக் கோஷத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மரம் நடக் கிளம்பி இருக்கிறார்.

பா.ம.க-வின் ‘பசுமைத் தாயகம்’ அமைப்பு!


பா.ம.க சார்பில் ஏற்கெனவே, ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1995-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பை, பா.ம.க தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அதன் நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். டாக்டர் அன்புமணி, அவரது மனைவி செளமியா ஆகியோர் இந்த அமைப்பு மூலம் மரம் நடும் நிகழ்வுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களைப்போலவே, இப்போது பசுமை அரசியலை விஜயகாந்த் கையில் எடுத்துள்ளார்.

அரசியலில் குதித்த விஜயகாந்த், தனது கட்சியின் செல்வாக்கை வன்னியர் சமூகம் அதிகம் வாழும் வட மாவட்டங்களில்தான் நிலைநாட்ட ஆர்வம் காட்டினார். விருத்தாசலம், ரிஷிவந்தியம் என்று வன்னியர் சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில்தான் நின்று வெற்றிபெற்றார். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை, பசுமைத் தமிழகம் மூலம் விஜயகாந்த் தொடங்கி இருக்கிறார்.
பசுமை அரசியல் கைகொடுக்குமா?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ