Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘உள்ளாட்சி கலவரத்திற்கு தயாராகிறதா அ.தி.மு.க?’ -சந்தேகம் எழுப்பும் சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன்

‘உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவார்களா’ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன். ' ஆட்சியில் அமர்ந்தாலே அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் வித்தியாசம் இல்லை' எனக் கொதிக்கிறார் அவர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டசபை செயல்பாடுகள் தொடர்பாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியில் அமரும் கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவதில்லை. 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அராஜகமாக நடந்து கொண்டது தி.மு.க. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.கவும் உள்ளாட்சிக் கலவரங்களுக்குக் காரணமானது. தற்போது வருகிற அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உள்ளனர். தேர்தல் முன் தயாரிப்புகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அ.தி.மு.க அரசு நடத்தவில்லை. இதற்கான அக்கறையும் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இந்த முறையும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது அரசு நிர்வாகம், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த கால அவகாசத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்தே அராஜக நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. 

அன்றைக்கு தனித் தொகுதிகள் மற்றும் பெண்களுக்கான தொகுதிகளுக்கு அறிவிப்புகூட முறையாகச் செய்யப்படவில்லை. மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. வாக்குப்பதிவு மையங்களுக்குள்ளேயே ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தன. இவை அனைத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கையின் போது தோல்வியடைந்த ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டார்கள். இதுபோன்றே 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சிக் கலவரங்கள் குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், அப்போதைய மாநகராட்சி ஆணையரைக் கண்டித்ததுடன் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டது. மாநில தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டுமென எதிர்பார்க்கும் அ.தி.மு.கவும் தி.மு.கவும், உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துகின்றன என்பதையே இந்த நிகழ்வுகளே சான்று. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விபரம் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டிய இட ஒதுக்கீடுகள் எவை என்ற அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. தேர்தல் தயாரிப்புகளில் வெளிப்படைத்தன்மையில்லாமல் மூடுமந்திரமாக ஆளுங்கட்சி செயல்படுவது சந்தேகத்தை அதிகரிக்கவே செய்கிறது” என்றார் கொந்தளிப்புடன். 

-ஆ.விஜயானந்த் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ