Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அ.தி.மு.க-வினருக்கு அடுத்த வாரம் இருக்கு!’’ - தி.மு.க.வின் புது திட்டம்

மிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவடைகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்பம் முதலே ஆளும் கட்சிக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்துவந்தது பலமான எதிர்க் கட்சியாக இருக்கும் தி.மு.க. அ.தி.மு.க-வின் மந்திரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர் தி.மு.க-வினர். அ.தி.மு.க-வினர் திணறுவதை முதல்வர் ரசிக்கவில்லை. அதன்பிறகு, சபாநாயகர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

இதனால், தி.மு.க-வினருக்குப் பேசும் வாய்ப்புக் குறைக்கப்பட்டது. குறிப்பாக, தி.மு.க-வினர் மீது அ.தி.மு.க-வினர் குற்றச்சாட்டுவைத்தால், அதை மறுக்கும் உரிமை கொஞ்சம் கொஞ்சமாகத் தி.மு.க-விடம் இருந்து பறிக்கப்பட்டது. எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பேச வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார். அதற்கடுத்து, மன்னிப்புக் கேட்டு இறங்கியும் வந்து பார்த்தார். எதற்கு அசராமல் இருந்தார் சபாநாயகர். அடுத்தகட்டமாக சபையை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள் தி.மு.க-வினர். இதனால் மதியவேளையில் முடிய வேண்டிய சபை நடவடிக்கைகள் மாலை நேரத்தையும் தாண்டி நீடித்தது.

முக்கிய மானியக் கோரிக்கைள்!

தி.மு.க-வினர் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை முடக்கிவந்த நிலையில், முதல்வரின் மானியக் கோரிக்கையின்போது இதே நிலை நீடித்தால், அது முதல்வருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் அ.தி.மு.க-வினர் மட்டும் இன்றி சபாநாயகருக்கும் இருந்தது. கடந்த வாரம் புதன்கிழமை வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘‘ ‘நமக்கு நாமே’ திட்டம் பற்றி அ.தி.மு.க உறுப்பினர் கூறிய கருத்தை மறுத்து, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றச் செயலாளர் மூலம் சபாநாயகரிடம் கூற அதை உடனடியாக செய்துமுடித்தார் சபாநாயகர்.

அதைத் தொடர்ந்து தி.மு.க-வினர் எழுப்பிய கூச்சல் குழப்பத்தைச் சாதகமாக்கிக்கொண்ட சபாநாயகர், அவர்கள் அனைவரையும் அவைக்காவலர்களைக் கொண்டு வெளியேற்றினார். அவைமுன்னவர் பன்னீர்செல்வம், தி.மு.க உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து, சட்டசபைக்குள் அவர்களை நுழையவிடாமல் செய்துவிட்டார்கள். ஒரு வாரம் என்பதன் காரணமே, முக்கிய மானியக் கோரிக்கைகள் இந்த ஒருவாரத்தில் நிறைவேற இருந்ததுதான்.

குறிப்பாக, முதல்வரின் காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை என முக்கிய மானியக் கோரிக்கைள் முடிந்துவிட்டன. ஒருவாரம் என்பது, இந்த வார புதன்கிழமையோடு நிறைவடைந்துவிட்டது. வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சட்டமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், சஸ்பெண்ட் செய்யபட்ட தி.மு.க உறுப்பினர்கள், திங்கள்கிழமை அன்றுதான் சபைக்கு வர முடியும். அவர்கள் வந்தபிறகு, மதுவிலக்கு ஆயத்தீர்வை, போக்குவரத்து உள்ளிட்ட சில மானியக் கோரிக்கைகள் மட்டுமே நடைபெற உள்ளன. அதுவும் அடுத்த மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும்.

‘‘அ.தி.மு.க-வினரைத் திணறடிக்காமல் விடமாட்டோம்!’’

‘‘நாங்கள் கேள்விகளால் நெருக்கடி கொடுக்க காத்திருந்த காவல் துறை மானியக் கோரிக்கைக்கு எங்களை  வரவிடாமல் வெளியேற்றிவிட்டார்கள். நாங்கள் கோட்டை பக்கமே வரக் கூடாது என்று கோட்டையைச் சுற்றி காவலர்களைக் குவித்துவிட்டார்கள். திங்கள்கிழமை சபைக்கு வந்து, அடுத்த மூன்று நாட்களில் நாங்கள் என்ன செய்யமுடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. நான்கு நாட்களிலும், எதைப் பற்றியும் பேசவிட மாட்டார்கள். அவர்கள் அ.தி.மு.க பொதுக்கூட்டம்போல நடத்துவதை நாங்கள் வேடிக்கை பார்க்கச் சொல்வதற்குதான் அனுமதி அளிக்கிறார்கள்.

எங்கள் உறுப்பினர்கள் அவரவர், தொகுதிப் பிரச்னைகளைப் பற்றிப் பேசமுடியாத நிலை உள்ளது. இருந்தாலும், நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்காமல் விடமாட்டோம். அ.தி.மு.க-வினரைத் திணறடிக்காமல் விடமாட்டோம். இந்த முறை மூத்த உறுப்பினர்கள்தான், பேச வாய்ப்புக் கேட்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுவார்கள். வெளியேற்றப்பட்டபின் புது உற்சாகத்தோடு நாங்கள் சபைக்குள் வர உள்ளோம். அது, சபை நடைபெறும் தினத்தன்று தெரியும்’’ என்றார் தி.மு.க-வின் புதுமுக எம்.எல்.ஏ ஒருவர்.

அடுத்தவாரம் அனல் பறக்கும்!

‘‘தி.மு.க-வினர் சபையில் இல்லை. எதிர்க் கட்சியாக மட்டுமே நாம் இருக்கிறோம். எதற்குத் தேவையில்லாமல் நாம் வெளிநடப்புச் செய்ய வேண்டும். அ.தி.மு.க-வோடு விவாதங்களில் பங்கெடுத்து, நாம் ஸ்கோர் செய்து இருக்கலாமே’’ என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அந்தக் கட்சி சட்டமன்றத் தலைவரிடம் புலம்பியுள்ளாராம். அதனால் அடுத்தவார சட்டமன்றக் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

- அ.சையது அபுதாஹிர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close