Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'15 வயது சிறுமியை சீரழித்தால் இதுதான் தீர்வா?' -சிக்கலில் மதுரை போலீஸ் 

மதுரையில் 15 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்கும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ' குற்றவாளி மீது பாலியல் வழக்கே பதிவு செய்யாமல் இருப்பது நியாயமா?' எனவும் கொதிக்கின்றனர். 

மதுரை, நாகமலைப் புதுக்கோட்டை பகுதிக்குட்பட்ட வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ராஜம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டியின் மகன் பொறியாளர் செல்வபிரபு, கடந்த ஏழு மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அதிர்ந்து போய் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீஸார், குற்றத்தில் ஈடுபட்ட செல்வபிரபு மீது பாலியல் வழக்குப் பதியவில்லை. " குற்றவாளியை வேண்டும் என்றே தப்ப வைக்கும் முயற்சியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்" எனக் குற்றம் சாட்டுகிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர். அவர் நம்மிடம்,

"சிறுமியுடன் படிக்கும் செல்வபிரபுவின் தங்கைதான் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார் செல்வபிரபு. இதைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது எனக் கடுமையான மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார். விவகாரம் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு, கடந்த 22-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட செல்வபிரபு மீது மிகச் சாதாரண வழக்குகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பாலியல் கொடுமைக்கான சட்டப் பிரிவுகளே முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. பழைய எஸ்.டி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்டப் பிரிவுகளை நிரப்பியுள்ளனர். 2015 எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் எந்தப் பிரிவுகளும் இடம்பெறவில்லை. போலீஸாரிடம் கேட்டால், ' குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை' என அலட்சியமாகப் பதில் சொல்கின்றனர். ஒரு சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுதான் தீர்வா? சிறுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். அவர்களால் போலீஸாரின் செயல்களுக்கு எதிராகப் போராட முடியவில்லை. கர்ப்பிணியாக இருக்கும் சிறுமிக்கு நீடித்த மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனையும் தேவைப்படுகிறது. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, எஸ்.பியை இன்று நேரில் சந்தித்துப் புகார் மனு கொடுக்க இருக்கிறோம்" என்றார் வேதனையோடு. 

' மதுரை உலைப்பட்டியில் ஐந்து சிறுவர்கள் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்வதில் அக்கறை காட்டிய போலீஸாருக்கு, 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட துன்பம் கண்ணில் படவில்லையா' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ