Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' கருணாநிதியா...ஸ்டாலினா?' -தெறிக்கவிடும் தூத்துக்குடி தி.மு.க.

தூத்துக்குடி தி.மு.கவில் உச்சகட்ட கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. ' என் பெயரைத் தவிர்த்துவிட்டு கூட்டம் நடத்துகிறார்கள்' என மாவட்ட செயலாளர் பெரியசாமியின் புகாரை அடுத்து, மாநில நிர்வாகி ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியியிருக்கிறது அறிவாலயம். 

தி.மு.கவின் முப்பெரும் விழாவில் கலைஞர் விருது பெற இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி. இதையொட்டி கோபாலபுரம் வீட்டில் வைத்து தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற வந்தவர், தூத்துக்குடி அரசியலில் தனக்கு எதிராக, நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். குறிப்பாக, ' உங்கள் ஆதரவில் நான் செயல்பட்டு வருகிறேன். புதிதாக பதவிக்கு வந்தவர்கள் தளபதியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்கின்றனர்' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இதன்பிறகு சில நிர்வாகிகளின் பெயரைக் குறிப்பிட்டு அறிவாலயத்தில் புகார் கொடுத்தார் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன். புகாரை அடுத்து, தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 

அந்த அறிவிப்பில், ' கடந்த 20.8.16 அன்று தூத்துக்குடி இளைஞர் அணி சார்பில், கலைஞரின் 93-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியினையும் நடத்தியுள்ளீர்கள். ஆனால், பொதுக் கூட்டத்திற்கான சுவரொட்டிகளிலோ துண்டறிக்கைகளிலோ தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரின் பெயரோ, சட்டமன்ற உறுப்பினர் பெயரோ இடம்பெறவில்லை. இதுகுறித்து அவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், வேண்டுமென்றே அவர்களைத் தவிர்க்கும் வகையில் கூட்டத்தை நடத்தியுள்ளீர்கள் என்பது தெரிய வருகிறது. இதுபோல் தொடர்ந்து நீங்கள் செயல்பட்டு வருவதாகவும், எதற்கெடுத்தாலும் பொருளாளர் தளபதியின் பெயரைப் பயன்படுத்துவதாகவும் தலைமையின் கவனத்திற்குப் புகார் வந்துள்ளது. இதுகுறித்து விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் அளிக்கத் தவறும்பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

அறிவாலயம் அனுப்பியுள்ள நோட்டீஸால் உற்சாகத்தில் இருக்கிறார் பெரியசாமி. ' என்னைத் தாண்டி அரசியல் செய்பவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டுவேன். இனி என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன்' எனப் பேசி வருகிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி இளைஞரணி நிர்வாகி ஒருவர்,

" பெரியசாமி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக ஆராய்ந்தால், யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும். கடந்த 20-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்திற்காக, ஒரு மாதம் முன்பே பெரியசாமியிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டோம். ' நல்லபடியாக நடத்துங்கள். வருகிறேன்' என அவர் உறுதியளித்தார். இதன்பிறகு, பொதுக் கூட்டத்திற்கான முதல் நோட்டீஸைக் கொடுப்பதற்காக, அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் கீதா ஓட்டலுக்குச் சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் பேசியபோது, ' மேனேஜரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' என்றார்.

அந்த நோட்டீஸில் அவருடைய பெயரும் அவரது மகள் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அவர் பெயரைப் புறக்கணித்துவிட்டு நாங்கள் நோட்டீஸ் அச்சடிக்கவில்லை. இதையெல்லாம் மறைத்துவிட்டு தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அவரோடு பேசியது முதல் நோட்டீஸ் கொடுக்கச் சென்றது வரையில், அனைத்திற்கும் ஆதாரத்தை வைத்திருக்கிறோம். அதிலும், தளபதியின் பெயரைப் பயன்படுத்துவதாகச் சொல்கின்றனர். அவரது பெயரைச் சொல்லாமல், வேறு யார் பெயரைச் சொல்வது? ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்த அறிக்கையின் நகலை பெரியசாமிக்கும் அனுப்பியிருக்கிறது அறிவாலயம். அதை வேண்டுமென்றே வெளியில் பரப்பிவிட்டார். இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களிடம் இருக்கும் ஆதாரத்தை தலைமைக்கு அளிப்போம்" என்றார். 

தலைமை விதித்த மூன்று நாள் கெடுவுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தூத்துக்குடி உடன்பிறப்புகள். 

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ